செய்திகள்

சிபிஎல் 2023: முதன்முறை சாம்பியன் பட்டத்தை வென்ற கயானா அமேசான் வாரியர்ஸ் அணி!

5 முறை இறுதிச் சுற்றுகளில் தோல்வியடைந்த கயானா அமேசான் வாரியர்ஸ் அணி முதன்முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

கோப்பையுடன் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி வீரர்கள்  •  Getty Images

கோப்பையுடன் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி வீரர்கள்  •  Getty Images

சிபிஎல் 2023 போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது கயானா அமேசான் வாரியர்ஸ் அணி.
பிராவிடென்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிச் சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற கயானா அமேசான் வாரியர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி பிரிடோரியஸின் பந்துவீச்சில் திணறியது.
தொடக்க ஆட்டக்காரர்களான சாத்விக் வால்டன் 10 ரன்களிலும் மார்க் தியால் 16 ரன்களிலும் ஆட்டமிழக்க, அந்த அணியின் சரிவும் தொடங்கியது. நிக்கோலஸ் பூரன், பொல்லார்ட், ரஸ்ஸல் என அதிரடி பேட்டர்களைக் கொண்ட டிரின்பாகோ அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பொறுமையாக விளையாடிய கேசி கார்டி மட்டும் 45 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.
அந்த அணியின் 7 பேட்டர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தார்கள். இதனால் 18.1 ஓவர்களில் வெறும் 94 ரன்களுக்கு ஆட்டமிழந்தது டிரின்பாகோ அணி. 20 ஓவர் ஆட்டங்களில் அந்த அணியின் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். டுவைன் பிரிடோரியஸ் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். கேப்டன் இம்ரான் தாஹிர் மற்றும் குடகேஷ் மோதி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
வாரியர்ஸ் அணி 14 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இந்தச் சுலபமான இலக்கை எட்டியது. தொடக்க ஆட்டக்காரர் சைம் அயூப் அரை சதம் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் முதன்முறையாக சிபிஎல் கோப்பையை கைப்பற்றியது கயானா அமேசான் வாரியர்ஸ் அணி. 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரிடோரியஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடரில் 481 ரன்கள் குவித்த ஷாய் ஹோப் தொடர் நாயகன் விருதைத் தட்டிச்சென்றார்.
2013, 2014, 2016, 2018 மற்றும் 2019 சிபிஎல் பருவங்களின் இறுதிச் சுற்றில் தோல்வியடைந்த கயானா அமேசான் வாரியர்ஸ் அணி இந்த முறை கோப்பையைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.