செய்திகள்

"பின்வாங்க மாட்டேன்": அம்பதி ராயுடு ஓய்வு!

2018-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார் ராயுடு.

அம்பதி ராயுடு  •  BCCI

அம்பதி ராயுடு  •  BCCI

இன்றைய இறுதி ஆட்டத்துடன் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டர் அம்பதி ராயுடு அறிவித்துள்ளார்.
ஓய்வு குறித்து ட்விட்டர் பக்கத்தில் ராயுடு தெரிவித்துள்ளதாவது:
"மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் என இரண்டு தலைசிறந்த அணிகள். 204 ஆட்டங்கள், 14 பருவங்கள், 11 பிளேஆஃப்-கள், 8 இறுதி ஆட்டங்கள், 5 கோப்பைகள். இன்றிரவு 6-வது கோப்பை வெல்வேன் என நினைக்கிறேன். இன்றைய ஆட்டமே எனது கடைசி ஐபிஎல் ஆட்டம் என முடிவு செய்துள்ளேன். தலைசிறந்த கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அனுபவங்களை நான் மிகவும் ரசித்தேன். அனைவருக்கும் நன்றி. இந்த முறை பின்வாங்க மாட்டேன்" என்றார்.
ராயுடுவுக்கு 2018 மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. சிஎஸ்கே அணிக்காக 16 ஆட்டங்களில் விளையாடிய அவர் ஒரு சதம் உள்பட 602 ரன்கள் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார்.
மொத்தம் 202 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள ராயுடு 4,329 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 28.11. ஸ்டிரைக் ரேட் 127.29. 22 அரை சதங்களும், 1 சதமும் அடித்துள்ளார்.