அம்சங்கள்

அம்பதி ராயுடு: மகேந்திர சிங் தோனியின் தளபதி!

சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் எடுத்த முயற்சியின் காரணமாக ஓய்வில் இருந்து மீண்டுவந்த ராயுடு எம்எஸ் தோனியின் முக்கியத் தளபதியாக மாறினார்.

அம்பதி ராயுடு  •  BCCI

அம்பதி ராயுடு  •  BCCI

"ராயுடுவை அணியில் வைத்துக்கொண்டு என்னால் ஃபேர்பிளே விருதை கற்பனை கூட செய்துப் பார்க்க முடியாது. ஆனால் ஆட்டம் என்று வந்துவிட்டால் தன்னுடைய 100 சதவீத உழைப்பைக் கொடுப்பவர் அவர்."... ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய தோனி தனது முக்கிய படைத்தளபதி ராயுடு குறித்து உதிர்த்த வார்த்தகள் இவை.
இந்த வருடம் அம்பதி ராயுடு ஏனோ எதிர்பார்த்த அளவுக்கு பேட்டிங்கில் சோபிக்கவில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்தார் போல முக்கியமான தருணத்தில் தான் யார் என்பதை நிரூபித்துவிட்டார். 18 பந்துகளில் 39 ரன்கள் தேவை என்கிற நிலையில் ஐபிஎல் 2023-ன் சிறந்த டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் மோஹித் சர்மாவை எதிர்கொண்ட அவர் மூன்று பந்துகளில் 6,4,6 என்று 16 ரன்களைக் குவித்தார்.
ஆட்டத்தை சிஎஸ்கே பக்கம் திருப்பியதில் ராயுடுவின் அந்தக் குட்டி கேமியோவுக்கு (cameo) ஒரு முக்கியப் பங்குண்டு. களத்தில் ஆக்ரோஷத்துக்கும் களத்துக்கு வெளியே சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரரான ராயுடு, சிஎஸ்கே வெற்றிபெற்றதும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டது ரசிகர்களை நெகிழ வைத்தது. ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ள அம்பதி ராயுடு, கடந்த வந்த பாதை என்பது ஏற்ற இறக்கங்களைக் கொண்ட கரடுமுரடான பாதை!
இங்கிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் ஆட்டத்தின்போது தான் அம்பதி ராயுடுவின் பெயர் வெளிச்சத்து வந்தது. இங்கிலாந்துக்கு எதிரான அந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர் 177 ரன்களைக் குவித்து அசத்தினார். ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்குத் தேர்வான அவர் ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்தார்.
2004-ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையில் ராயுடு தலைமையிலான இந்திய அணி அரை இறுதி வரை முன்னேறியது. ஆனால் அடுத்தடுத்த வருடங்களில் விதி, அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. ஹைதராபாத் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆந்திராவுக்கு அணி மாறினார் ராயுடு.
2007-ல் இந்தியன் கிரிக்கெட் லீகில் (ICL) விளையாடியதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் ராயுடுவுக்கு வாழ்நாள் தடை விதித்தது. 2009-ல் பிசிசிஐ, ராயுடு உள்பட ஐசிஎல் அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் மீதான தடையை விலக்கியது. 2010-ல்மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒப்பந்தமான அவர், 2017 வரை அந்த அணியின் முன்னணி பேட்டராகத் திகழ்ந்தார்.
2018-ல் ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்ட அம்பதி ராயுடு, தனது அறிமுக சீசனிலேயே 602 ரன்களைக் குவித்து 'தல' தோனியின் தளபதிகளில் ஒருவராக மாறினார். ஐபிஎல்-லில் அசைக்க முடியாத வீரர் என்றாலும் சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமான ராயுடு, தனது முதல் ஆட்டத்திலேயே அரை சதம் அடித்து நம்பிக்கை அளித்தார்.
2015 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்ற போதும் ராயுடுவுக்கு ஒரு ஆட்டத்தில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2016 டி20 உலகக் கோப்பைக்கான அணியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஐபிஎல்-லில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து 2018-ல் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்தார் ராயுடு.
2019 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்த ராயுடுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நான்காம் இடத்தில் பேட்டிங் செய்வதற்கு முப்பரிமாண வீரர் (3D) என்ற அடிப்படையில் தமிழகத்தை சேர்ந்த பேட்டிங் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். தான் ஒதுக்கப்பட்டதாக உணர்ந்த ராயுடு தனது சமூக வலைதளப் பக்கத்தில் 3D கண்ணாடியுடன் இருக்கும் படத்தைப் பதிவிட்டார்.
தேர்வுக்குழு மீது மன வருத்தத்தில் இருந்த ராயுடு, உடனடியாக அனைத்துது வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்தார். சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் எடுத்த முயற்சியின் காரணமாக ஓய்வில் இருந்து மீண்டுவந்த ராயுடு சிஎஸ்கே அணியின் முக்கிய பேட்டிங் தூணாக மாறினார். ஓய்வை அறிவித்துவிட்டு பிறகு பின்வாங்குவது என்பது ராயுடுவுக்கு ஒன்றும் புதிதல்ல.
2017-ல் முதல்தரக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ராயுடு பிறகு தன் முடிவை மாற்றிக்கொண்டு தொடர்ந்து விளையாடினார். இன்னொரு முறை யூ டர்ன் (U turn) கிடையாது; இத்தோடு சரி என்று குறும்புடன் ராயுடு டிவீட்டியதன் பின்னணி இதுதான்.
"அம்பதி ராயுடு ஒரு சாதனையாளர். ஒரு பேட்டராக அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்புள்ளது. அவரை ஓய்வை அறிவித்துள்ளது சிஎஸ்கே அணிக்கு நிச்சமாக ஒரு இழப்புதான். ஆனால் அவருடைய முடிவை நாங்கள் மதிக்கிறோம்" என்கிறார் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்.
"ராயுடுவுடன் நான் இந்தியா ஏ அணி காலத்தில் இருந்து விளையாடி வருகிறேன்.என்னைப் போலவே அவரும் மொபைல் போனை அதிகம் பயன்படுத்த மாட்டார். சுழற்பந்து வீச்சையும் வேகப்பந்து வீச்சையும் திறம்பட எதிர்கொள்பவர் அவர்." என்று புகழாரம் சூட்டுகிறார் மகேந்திர சிங் தோனி.
6 ஐபிஎல் கோப்பைகளுக்கு சொந்தக்காரரான ராயுடுவிடம் ஓய்வு குறித்து பேசிய போது "இந்த தருணத்தை நினைத்து என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் இருப்பேன். கடந்த 30 ஆண்டுகளாக நான் கடினமாக உழைத்துள்ளேன். இப்படிப்பட்ட ஒரு வெற்றியுடன் நான் ஓய்வுபெறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்