செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: வெண்கலப் பதக்கம் வென்ற வங்கதேச மகளிர் அணி!

ஷோர்னா அக்தர் சிறப்பாகப் பந்துவீசி 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஷோர்னா அக்தர்  •  AFP/Getty Images

ஷோர்னா அக்தர்  •  AFP/Getty Images

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட்டில் வங்கதேச அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
அரையிறுதிச் சுற்றில் இந்தியாவிடம் தோல்வியடைந்த வங்கதேசமும் இலங்கையிடம் தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தானும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் மோதின. ஹாங்சோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.
நடுவரிசை பேட்டர்கள் நிலைத்து ஆடத் தவறியதால் 9 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் மட்டுமே எடுத்தது பாகிஸ்தான் மகளிர் அணி. அதிகபட்சமாக ஆலியா ரியாஸ் 17 ரன்களை எடுத்தார். ஷோர்னா அக்தர் சிறப்பாகப் பந்துவீசி 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்த எளிமையான இலக்கைத் துரத்திய வங்கதேசம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் விக்கெட்டுக்கு ஷஹிமா சுல்தானா - ஷாதி ரானி இணை 27 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தாலும் ஷோர்னா அக்தர் கடைசிக் கட்டத்தில் பொறுமையாக விளையாடி 14 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 10 பந்துகள் மீதமிருந்த நிலையில் வங்கதேசம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட்டும் அங்கமாக இருந்தது. அந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் வங்கதேசத்தை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்ற பாகிஸ்தான், தற்போது 4-ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் பறிகொடுத்துள்ளது.