பந்துவீச்சாளர் முனையில் ரன் அவுட்: நியூசி. பேட்டரைத் திரும்ப அழைத்த வங்கதேச கேப்டன்!
மஹ்முத் பந்தால் ஸ்டம்புகளைத் தாக்கும் போது, சோதி கிரீஸுக்கு வெளியே இருப்பது உறுதியானதால் அவுட் கொடுக்கப்பட்டது.
ESPNcricinfo staff
23-Sep-2023
ஹசன் மஹ்முத் மற்றும் இஷ் சோதி • BCB
நியூசிலாந்து - வங்கதேசம் இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் பந்துவீச்சாளர் முனையில் நியூசி. பேட்டரை ரன் அவுட் செய்தபோதிலும் அந்த பேட்டரைத் திரும்ப அழைத்தார் வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ்.
நியூசிலாந்து அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் ஆட்டம் டாக்காவில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.
ஆட்டத்தின் 46-வது ஓவரை ஹசன் மஹ்முத் வீசினார். அப்போது பந்துவீச்சாளர் முனையில் இஷ் சோதி நின்றிருந்தார். பந்து வீசப்படுவதற்கு முன்னரே சோதி கிரீஸை விட்டு வெளியே செல்வதைக் கவனித்த மஹ்முத் அவரை, பந்துவீச்சாளர் முனையில் ரன் அவுட் செய்தார். இதுகுறித்து முடிவெடுக்க மூன்றாம் நடுவருக்கு பரிந்துரை செய்தார் கள நடுவர்.
மஹ்முத் பந்தால் ஸ்டம்புகளைத் தாக்கும் போது, சோதி கிரீஸுக்கு வெளியே இருப்பது உறுதியானதால் மூன்றாம் நடுவரும் அவுட் கொடுத்தார். இதனால், புன்னைகையுடன் ஓய்வறை நோக்கி நடக்கத் தொடங்கினார் சோதி. அப்போது அவர் 17 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனிடையே, வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் நடுவரிடம் சென்று சோதியை மீண்டும் விளையாட அனுமதிக்கும்படி கோரிக்கை வைக்க, சோதி பேட்டிங் செய்யத் திரும்பி வந்தார். பொதுவாகப் பந்துவீச்சாளர் முனையில் ரன் அவுட் செய்வது தொடர்ந்து சர்ச்சையாகி, பல விவாதங்களை ஏற்படுத்துவதால் அவற்றைத் தவிர்ப்பதற்காக லிட்டன் தாஸ் இம்முடிவை எடுத்திருக்கலாம். தொடர்ந்து விளையாடிய சோதி 35 ரன்கள் எடுத்து காலித் அஹமது பந்தில் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பந்துவீச்சாளர் முனையில் ரன் அவுட் செய்வதற்குப் பந்துவீச்சாளர்கள் தயங்குவதால்,, 2022 மார்ச்சில் இதுபோல ஆட்டமிழக்கச் செய்வதை ரன் அவுட் என அறிவித்தது எம்சிசி. இதுபோல ரன் அவுட் செய்யும் பந்துவீச்சாளரை வில்லனாகச் சித்தரிக்கக் கூடாது. இது விதிமுறைகளின்படி சரியான நடவடிக்கையே என எம்சிசி தரப்பு விளக்கமும் அளித்தது. இதன் அடிப்படையில், லிட்டன் தாஸின் நடவடிக்கை கிரிக்கெட் உலகில் ஆச்சர்யத்தையே ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 86 ன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது நியூசிலாந்து அணி.