செய்திகள்

ஹசரங்கா உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகம்!

காயம் காரணமாக ஆசியக் கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடாத சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்‌ஷனா, உலகக் கோப்பைக்குத் தயாராகிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வனிந்து ஹசரங்கா  •  ICC/Getty Images

வனிந்து ஹசரங்கா  •  ICC/Getty Images

இலங்கை ஆல்-ரவுண்டர் வனிந்து ஹசரங்கா உலகக் கோப்பையிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அவரது காயத்துக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம் என்பதால் உலகக் கோப்பையில் ஹசரங்கா விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.
துஷ்மந்தா சமீராவும் காயம் காரணமாக ஆசியக் கோப்பையில் விளையாடவில்லை. இவரும் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். தற்போதைய சூழலில் இவரால் எவ்வித அசௌகரியமும் இல்லாமல் முழுமையாக 10 ஓவர்களை வீச முடியவில்லை. இதன் காரணமாக, உலகக் கோப்பையில் இவர் விளையாடுவதும் கேள்விக்குறியாகியுள்ளது.
காயம் காரணமாக ஆசியக் கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடாத சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்‌ஷனா, உலகக் கோப்பைக்குத் தயாராகிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அக்டோபர் 7-ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்துக்கு முன்பே அவர் முழு உடற்தகுதியடைந்துவிடுவார் என இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவக் குழுத் தலைவர் அரவிந்தா டி சில்வா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இவர் ஈஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோவிடம் கூறுகையில், மருத்துவ ரீதியாக உலகக் கோப்பைக்கு முன்பு அவர் முழு உடற்தகுதியடைய முடியாது. லங்கா பிரீமியர் லீக்கின்போது அவருக்கு இரண்டாம் நிலை தசைப்பிடிப்பு ஏற்பட்டது. காயத்திலிருந்து குணமடைந்து வரும் சமயத்தில் அது மூன்றாம் நிலையாக மாறிவிட்டதால் சிரமம் என்றார்.
ஆசியக் கோப்பைக்கான அணியை அறிவிக்கும்போது, இவர் ஆசியக் கோப்பையின் கடைசி கட்ட ஆட்டங்களுக்குள் முழு உடற்தகுதியடைந்துவிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும், உலகக் கோப்பையைக் கருத்தில்கொண்டு அவர் ஆசியக் கோப்பை அணியில் சேர்க்கப்படவில்லை என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
சமீபத்திய தகவல்களின்படி, காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைய ஹசரங்காவுக்குக் குறைந்தபட்சம் 4 முதல் 6 வார காலங்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. லீக் சுற்றின் கடைசி கட்ட ஆட்டங்களுக்குள் முழு உடற்தகுதியடைந்துவிடுவார் என்பது உறுதியானால், அவர் உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் தேர்வு செய்யப்படலாம். ஆனால், மருத்துவர்கள் அறிவுரையில் இது அபாயகரமான முடிவு என்று கூறப்படுகிறது.
வேகப்பந்துவீச்சாளர்கள் லஹிரு குமாரா மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோரும் காயம் காரணமாக ஆசியக் கோப்பையில் விளையாடவில்லை. இவர்கள் இருவரும் முழு உடற்தகுதியை அடைந்துவிட்டதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவக் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக செப்டம்பர் 26-ம் தேதி இந்தியாவுக்குப் புறப்படும் இலங்கை, இதுவரை உலகக் கோப்பைக்கான அணியை அறிவிக்கவில்லை.