செய்திகள்

முழங்கால் காயம்.. தோனிக்கு அறுவை சிகிச்சையா?: காசி விஸ்வநாதன் விளக்கம்!

சிஎஸ்கே அணியில் எவ்வித சிக்கலும் இல்லாமல் தோனி பார்த்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார் காசி விஸ்வநாதன்.

எம்.எஸ். தோனி  •  BCCI

எம்.எஸ். தோனி  •  BCCI

ஐபிஎல் 2023 போட்டி முழுவதுமே இடது முழங்கால் காயத்துடன் தோனி அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாகவே கீழ்வரிசை பேட்டராகவே களமிறங்கினார் அவர். இருப்பினும், இந்தக் காயம் அவருடைய கேப்டன்சி மற்றும் கீப்பிங் செயல்பாடுகளை பாதிக்காமலும் அவர் பார்த்துக்கொண்டார். இதன்காரணமாக, 5-வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது சென்னை.
இந்நிலையில், பிடிஐ-யிடம் தோனியின் காயம் குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் பேசுகையில்,"தோனி அவருடைய முழங்கால் காயம் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறவுள்ளார். ஒருவேளை அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டால், அறிக்கைகள் வந்த பின்னரே அதை உறுதிப்படுத்த முடியும். அது முற்றிலும் தோனியின் முடிவு" என்றார்.
தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா? அப்படி இல்லாவிட்டால் வரவிருக்கும் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணியிடம் கூடுதலாக ரூ. 15 கோடி இருக்குமே எனக் கேட்கப்பட்டதற்குப் பதில் அளித்த காசி விஸ்வநாதன்,"சிஎஸ்கே ஒருபோதும் அப்படியான கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உண்மையில் அதைப்பற்றி இன்னும் நாங்கள் சிந்திக்கவே இல்லை. அது முழுவதும் தோனியின் முடிவு" என்றார்.
முன்னணி வீரர்களுக்கு தொடர்ந்து காயங்கள் ஏற்பட்ட போதிலும், சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது எப்படி என்பது குறித்து விளக்கிய விஸ்வநாதன்,"இதற்கு அணியின் கூட்டு முயற்சியே காரணம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்கான பணி என்ன என்பதில் தெளிவாக இருந்தனர். உதாரணத்துக்கு பென் ஸ்டோக்ஸ் அணியினருடன் இயல்பாகவே இருந்தார். இளம் வீரர்கள் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டனர். இது தோனியால் சாத்தியமானது" என்றார்.
விளையாடிய 14 சீசன்களில் 10 சீசன்களில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சிஎஸ்கேவின் தனிச்சிறப்பு என்ன எனக் கேட்கப்பட்டதற்குப் பதிலளித்த காசி விஸ்வநாதன், "நான் முதல் சீசனில் இருந்து சிஎஸ்கேவுடன் பயணித்து வருகிறேன். எங்கள் செயல்பாட்டில் இருந்து நாங்கள் ஒருபோதும் விலகவில்லை. விஷயங்களை எளிமையாக வைத்திருப்பதும், ஒவ்வொரு வீரரிடமிருந்தும் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை விளக்குவதும் முக்கியம். எங்கள் அணியில், கேப்டன் எல்லாவற்றையும் சிக்கலின்றி வைத்திருக்கிறார்" என்றார்.