செய்திகள்

ஐபிஎல் போட்டிக்கு முன்பு, முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தினேஷ் கார்த்திக்!

ஆஷஸ் வர்ணனையாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தினேஷ் கார்த்திக்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

தினேஷ் கார்த்திக்  •  PTI

தினேஷ் கார்த்திக்  •  PTI

ஆஷஸ் தொடரில் வர்ணனையாளராகப் பணிபுரியவுள்ளதாகப் பிரபல பேட்டர் தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று ஆகியவற்றுக்குப் பிறகு ஜூன் 16 முதல் இங்கிலாந்தில் ஆஷஸ் தொடர் தொடங்கவுள்ளது. தற்போது ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலியா வசம் உள்ளது.2021-22-ல் 4-0 என இங்கிலாந்தை வீழ்த்தியது.
ஒன்றரை மாதங்களுக்கு நடைபெறும் ஆஷஸ் தொடரின் வர்ணனையாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தினேஷ் கார்த்திக்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
ஆஷஸ் தொடரை ஒளிபரப்பும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வர்ணனையாளர்களின் பட்டியலில் தினேஷ் கார்த்திக், இயன் மார்கன், கெவின் பீட்டர்சன், ரிக்கி பாண்டிங், மார்க் டெய்லர், குமார் சங்கக்காரா, மெல் ஜோன்ஸ், ஐயன் வார்ட், நாசிர் ஹுசைன், ஆர்தர்டன், மார்ட் புட்சர், ஆண்ட்ரூ ஸ்டிராஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
இதுகுறித்து ட்விட்டரில் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:
ஐபிஎல் போட்டியில் ஒரு வீரராக விளையாடுவதற்கு முன்பு, ஒரு பெரிய அறிவிப்பு இது. ஜாம்பவான்களுக்கு மத்தியில் நானும் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. இச்செய்தியைப் பகிரவேண்டும் எனத் தோன்றியது. வாய்ப்பளித்த ஸ்கை ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் நிர்வாகத்துக்கு நன்றி என்றார்.