செய்திகள்

ஐபிஎல் போட்டியில் வீரர்கள் ஓய்வெடுப்பது சந்தேகமே: ரோஹித் சர்மா

ஐபிஎல் அணிகளுக்கு நாங்கள் சில ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் போன்ற ஒன்றை வழங்கியுள்ளோம்

ரோஹித் சர்மா (வலது)  •  Mumbai Indians

ரோஹித் சர்மா (வலது)  •  Mumbai Indians

இந்திய வீரர்கள் பலருக்கும் அடிக்கடிக் காயம் ஏற்படுகிறது. இதனால் சிலசமயம் இந்தியாவுக்காக விளையாட முடியாமல் போய்விடுகிறது. அடுத்த வாரம் ஐபிஎல் தொடங்குகிறது. ஐபிஎல் முடிந்த பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா பங்கேற்கிறது. இதனால் இந்திய வீரர்களுக்குப் போதிய ஓய்வு கிடைக்குமா, அல்லது ஐபிஎல் போட்டியில் விளையாடி இன்னும் சோர்வை அடையப் போகிறார்களா? ரசிகர்களின் மனத்தில் உள்ள இந்தக் கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரோஹித் சர்மா, வீரர்களின் பணிச்சுமை மேலாண்மை குறித்துக் கூறியதாவது:இனி அனைத்துமே ஐபிஎல் அணி நிர்வாகங்களின் பொறுப்பு. அவர்களது கட்டுப்பாட்டில்தான் வீரர்கள் இருக்கப்போகிறார்கள். எனவே, ஐபிஎல் அணிகளுக்கு நாங்கள் சில ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் போன்ற ஒன்றை வழங்கியுள்ளோம். ஆனால், இறுதியில் இதுகுறித்து முடிவெடுப்பது சம்பந்தப்பட்ட அணிகளின் நிர்வாகங்களின் கையில்தான் உள்ளது. முக்கியமாக, வீரர்கள்தான் அவர்களது உடலைப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் ஒன்றும் குழந்தைகள் அல்லர். சற்று கூடுதல் சுமையாக இருப்பதாக உணர்ந்தால், அவர்கள் உரிய அணி நிர்வாகத்திடம் பேசி ஓரிரு ஆட்டங்களுக்கு ஓய்வை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், அது நடக்குமா என்பது சந்தேகமே."
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், காயம் காரணமாக ஐபிஎல் முதல் பகுதி ஆட்டங்களில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் நீண்ட நாள்களாகக் காயத்திலிருந்து மீண்டு வருகின்றனர்.காயமடைந்த வீரர்களின் பட்டியல் பற்றி ரோஹித் சர்மா கூறுகையில், "இது பிரச்னைக்குரியதுதான். தொடர்ச்சியாக, இந்திய அணியில் விளையாடும் வீரர்களைதான் நாங்கள் இழந்து வாடுகிறோம். ஆனால், உண்மையில் எல்லோருமே அவர்களால் முடிந்தவற்றை செய்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பதான் முயல்கின்றனர்.
வீரர்களின் பணிச்சுமை மேலாண்மையிலும் நாங்கள் நிறைய கவனம் செலுத்துகிறோம். இதன் காரணமாகவே, குறிப்பிட்ட நேரத்தில் சில வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படுகிறது. நிறைய கிரிக்கெட் விளையாடினால் காயம் ஏற்படுவது இயல்பானது. எனவே, இதுபற்றி ஆழமாக ஆராயக் கூடாது. நம் கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தினால்போதும். வீரர்களுமேகூட விரக்தியில்தான் உள்ளனர். அவர்களும் விளையாட்டிலிருந்து ஓய்வெடுக்க விரும்பவில்லை. இது வருத்தத்துக்குரியதுதான் என்றாலும், இறுதியில் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.
பின்னணியில், இந்த வீரர்களுடன் இணைந்து கடுமையான உழைப்பைச் செலுத்துபவர்களை என்னால் பார்க்க முடிகிறது. அப்படி இருந்தும்கூட சில நேரங்களில் வினோதமான முறையில் காயங்கள் ஏற்படுகின்றன. இதற்கு சிறந்த உதாரணம் ஷ்ரேயஸ். ஒருநாள் முழுக்க எதுவுமே செய்யாமல், பயிற்சியை மேற்கொள்ளச் சென்றார். அவருக்குக் காயம் ஏற்பட்டுவிட்டது. எனவே, இதில் நாம் செய்வதற்கு ஒன்றும் கிடையாது. வீரர்களின் பணிச்சுமையை மட்டும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். அது மட்டுமே நம்மால் செய்ய முடியும். எங்கள் தரப்பிலிருந்து நாங்கள் அதைச் செய்து வருகிறோம்" என்றார் ரோஹித் சர்மா.மார்ச் 31-ல் அஹமதாபாத்தில் தொடங்கும் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.