ஆட்டங்கள் (7)
உலகக் கோப்பை (1)
WC Warm-up (2)
Asian Games (M) (1)
IND v ஆஸி (3)
செய்திகள்

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட ஜேசன் ராய்!

இன்க்ரிமென்டல் ஒப்பந்தத்தில் ஹாரி புரூக், டேவிட் மலான், மேத்யூ பாட்ஸ், ஜேசன் ராய், ரீஸ் டாப்லே, டேவிட் வில்லி என ஆறு வீரர்கள் உள்ளார்கள்.

பெவிலியன் திரும்பும் ஜேசன் ராய்  •  AFP/Getty Images

பெவிலியன் திரும்பும் ஜேசன் ராய்  •  AFP/Getty Images

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடனான தனது மத்திம ஒப்பந்தத்தை முன்னணி வீரர் ஜேசன் ராய் முறித்துக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் அறிமுகமாகவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி) போட்டியில் விளையாடுவதற்கு முனைப்பு காட்டும் இங்கிலாந்து ஒருநாள், டி20 கிரிக்கெட் வீரர்கள், தங்களை ஒப்பந்தத்திலிருந்து விடுவிக்குமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் (இசிபி) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
அனைத்து வகை கிரிக்கெட் ஆட்டங்களிலும் விளையாடும் இங்கிலாந்து வீரர்கள் மத்திய ஒப்பந்தத்தில் இருப்பார்கள். இவர்களால், எம்எல்சி போட்டியில் விளையாட முடியாது. ஆனால் ஒருநாள், டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் ஜேசன் ராய், இரு தரப்புக்கும் சுமூகமான இன்க்ரிமென்டல் ஒப்பந்தத்தில் (Incremental contract) இருக்கிறார். எம்எல்சி போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார்.
இதுபற்றி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் ஜேசன் ராய் முறையிட்டார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளது. எனினும், ராய் இங்கிலாந்து அணிக்குத் தேர்வாவதில் இது எவ்வித பாதிப்பையும் உண்டாக்காது என அது விளக்கமளித்துள்ளது.
இசிபி தெரிவித்ததாவது:
"இந்த முடிவு குறித்து விளக்கமளிக்க இசிபி விரும்புகிறது. ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வது, ராய் இங்கிலாந்து அணிக்குத் தேர்வாவதில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இங்கிலாந்து கிரிக்கெட்டுக்காக ஜேசன் ராய் முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்பதில் நாங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம்."
ஜேசன் ராய் என்ன சொல்கிறார்?
"கடந்த 24 மணி நேரங்களாக அவசியமற்ற பல ஊகங்கள் கசிந்து வருவதால், இதுபற்றி தெளிவுபடுத்த விரும்புகிறோம். நான் ஒருபோதும் இங்கிலாந்து கிரிக்கெட்டிலிருந்து வெளியேற மாட்டேன். இங்கிலாந்து அணிக்காக விளையாடுவது எப்போதுமே எனக்குப் பெருமைக்குரிய தருணம்தான். இன்னும் நிறைய ஆண்டுகள் இங்கிலாந்து அணிக்காக நான் விளையாடுவேன். இதுவே எனது பிரதானமாக இருக்கும்.
எம்எல்சி போட்டியில் விளையாடுவது குறித்து இசிபியுடன் தெளிவான நேர்மறையான உரையாடல் நடந்துள்ளது. மீதமுள்ள ஒப்பந்த நாள்களுக்கு அவர்கள் எனக்கு ஊதியம் கொடுக்க வேண்டிய தேவை இல்லாதவரை, நான் எம்எல்சி போட்டியில் விளையாடுவது இசிபி-க்கு மகிழ்ச்சியே.
எம்எல்சி போட்டி நடைபெறும் நாள்களில் எந்தவொரு இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை என்பதால், மத்திய ஒப்பந்தத்தில் இல்லாத நான், எம்எல்சி போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். முடிந்தளவுக்கு நிறைய போட்டிகளில் விளையாடுவது இங்கிலாந்து வீரராக எனக்குப் பலனையே தரும்.
குறிப்பாக விரைவில் உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால் இங்கிலாந்து கிரிக்கெட்தான் எனது பிரதானம் என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். எனக்கோ, எந்தவொரு வீரருக்கோ சரி, நாட்டுக்காக விளையாடுவது மிகப் பெரிய பெருமை" என்றார் ராய்.
எம்எல்சி போட்டி நடைபெறுவது எப்போது?
எம்எல்சி போட்டி ஜூலை 13 முதல் 30 வரை அமெரிக்காவின் டெக்சாஸிலுள்ள கிராண்ட் பிராய்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு இந்தியா, ஆஸ்திரேலியாவிடமிருந்து ஆதரவு கிடைத்துள்ளது. மொத்தமுள்ள 6 அணிகளில் 4-இல் ஐபிஎல் அணி நிர்வாகங்கள் முதலீடு செய்துள்ளன. மற்ற 2 அணிகளில் கிரிக்கெட் விக்டோரியா, கிரிக்கெட் நியூ சௌத் வேல்ஸ் அணிகள் முதலீடு செய்துள்ளன.
டி20 பிளாஸ்ட் போட்டியின் அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் ஜூலை 15-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் டி20 பிளாஸ்டில் (T20 Blast) சர்ரே அணிக்காக விளையாடும் ஜேசன் ராயால், எம்எல்சி போட்டியின் தொடக்க ஆட்டங்களில் விளையாட முடியாத நிலை ஏற்படும்.
ஆனால், வரும் காலங்களில் எம்எல்சி போட்டி விரிவுபடுத்தப்பட்டால், தி ஹண்ட்ரட் (The Hundred) போட்டியும் இதுவும் ஒரே சமயத்தில் நடக்க நேரிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இதன் காரணமாகவே, மத்திய ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களுக்கு தடையில்லாச் சான்றிதழ் கொடுக்க இசிபி மறுப்பு தெரிவிக்கிறது.
ஆனால், இசிபியுடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டாலும் இன்க்ரிமென்டல் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களுக்கு , எம்எல்சி போட்டி மூலம் பொருளாதார ரீதியாகப் பெரும் லாபம் கிடைக்கிறது.
இன்க்ரிமென்டல் ஒப்பந்தத்தில் ஹாரி புரூக், டேவிட் மலான், மேத்யூ பாட்ஸ், ஜேசன் ராய், ரீஸ் டாப்லே, டேவிட் வில்லி என ஆறு வீரர்கள் உள்ளார்கள். இவர்களது ஆண்டு வருமானம் 66 ஆயிரம் யூரோ டாலர். இசிபி-யின் வருடாந்திர ஒப்பந்தம் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை கணக்கில் கொள்ளப்படும். தற்போதைய நிலையில் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வது மூலம் 20 ஆயிரம் யூரோ டாலர் மட்டுமே இழப்பு ஏற்படும்.
ஒவ்வொரு எம்எல்சி அணியும் 16 முதல் 19 வீரர்களைத் தேர்வு செய்ய மொத்தத் தொகையாக ஏறத்தாழ 9,30,000 யூரோ டாலர் வைத்துள்ளது. எனவே, நிச்சயம் மிகப் பெரிய தொகைக்கே வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மார்கஸ் ஸ்டாய்னிஸ், குயின்டன் டி காக், வனிந்து ஹசரங்கா, அன்ரிச் நோர்க்கியா, கிளென் பிளிப்ஸ் போன்ற பல்வேறு முன்னணி டி20 வீரர்கள் எம்எல்சி போட்டியில் வெளிநாட்டு வீரர்களாக ஒப்பந்தமாகியுள்ளார்கள். டிரெண்ட் போல்ட், ஆடம் ஸாம்பா ஆகியோர் வரும் வாரங்களில் விரைவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராய் எந்த அணிக்காக விளையாடுவார்?
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஜேசன் ராய் விளையாடினார். எம்எல்சி உள்பட மற்ற டி20 லீக் போட்டிகளிலும் நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுவதற்கு ஒப்பந்தத்தில் உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளது. எனினும், ராய் தரப்பிலிருந்து இதுபற்றி கருத்து தெரிவிக்கவில்லை. எனவே, எம்எல்சி போட்டியில் எல்ஏ நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் விளையாடவே அதிகளவில் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.