செய்திகள்

சிஎஸ்கே ரசிகர்களுக்காக அடுத்த வருடம் விளையாட முயல்வேன் - தோனி அறிவிப்பு!

நான் விளையாடுவதைப் பார்க்கும் எவர் ஒருவரும் தன்னாலும் கிரிக்கெட் விளையாட முடியும் என்று நம்பிக்கை கொள்ளமுடியும் என்றார் தோனி

மகேந்திர சிங் தோனி  •  AFP/Getty Images

மகேந்திர சிங் தோனி  •  AFP/Getty Images

சிஎஸ்கே ரசிகர்களுக்காக அடுத்த வருடம் விளையாட முயல்வேன் என்று மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார்.
அஹமாதாபாதில் நடைபெற்ற ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை சென்னை அணி வென்றது. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சாய் சுதர்சனின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணி 214 ரன்களைக் குவித்தது.
மழை காரணமாக ஆட்டம் சில மணி நேரம் தடைப்பட்டதால் 15 ஓவர்களில் 171 ரன்கள் சென்னைக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கான்வே, ரஹானே, ராயுடு போன்றவர்களின் அபார ஆட்டத்தால் சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மோஹித் சர்மா வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்த ஜடேஜா சிஎஸ்கேவின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
பரிசளிப்பு விழாவில் பேசிய தோனி "தற்போதுள்ள சூழ்நிலையில் என் ஓய்வை அறிவிக்க இதுதான் சரியான நேரம். எல்லாருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு ஓய்வை அறிவிப்பது எனக்கு மிகவும் எளிது. ஆனால் இன்னொரு வருடம் விளையாடுவதுதான் சிஎஸ்கே ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு நான் கொடுக்கும் பரிசாக இருக்க முடியும். இது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி அத்தியாயம்." என்றார்.
மேலும் தோனி பேசியதாவது: என்னுடைய ஆட்டப் பாணி மரபுவழியானது கிடையாது. ஆட்டத்தை எளிதாக அணுகுவது என்னுடைய பாணி. நான் விளையாடுவதைப் பார்க்கும் எவர் ஒருவரும் தன்னாலும் கிரிக்கெட் விளையாட முடியும் என்று நம்பிக்கை கொள்ளமுடியும். ராயுடு களத்தில் எப்போதுமே தன்னுடைய 100 சதவீத உழைப்பைக் கொடுப்பவர். அவருடன் நான் இந்தியா ஏ அணி காலத்தில் இருந்து விளையாடி வருகிறேன். என்னைப் போலவே அவரும் அதிகம் கைபேசியை பயன்படுத்தாதவர். சுழற்பந்து வீச்சையும் வேகப்பந்து வீச்சையும் திறம்பட எதிர்கொள்பவர் அவர் என்றார்.