டிஎன்பிஎல் போட்டியில் டிஆர்எஸ், இம்பாக்ட் வீரர் விதிமுறைகள் அறிமுகம்!
குவாலிஃபையர் 1, எலிமினேட்டர் ஆட்டங்கள் சேலத்திலும் குவாலிஃபையர் 2, இறுதி ஆட்டங்கள் திருநெல்வேலியிலும் நடைபெறுகின்றன.
ESPNcricinfo staff
31-May-2023
டிஎன்பிஎல் கோப்பையுடன் ஸ்ரீநிவாசன், தோனி மற்றும் பிஎஸ் ராமன் • TNPL
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) போட்டியில் இந்த வருடம் சில புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎல் போட்டி வரும் ஜூன் 12 தொடங்கி ஜூலை 12 வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 25 நாட்களுக்கு நீளும் இந்தப் போட்டியில் 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. கோவை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் போட்டி நடத்தப்படுகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தும் பணிகள் நடைபெறுவதால் இந்த ஆண்டு டின்பிஎல் போட்டி அங்கே நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், குவாலிஃபையர் 1, எலிமினேட்டர் ஆட்டங்கள் சேலத்திலும் குவாலிஃபையர் 2, இறுதி ஆட்டங்கள் திருநெல்வேலியிலும் நடைபெறுகின்றன.
இந்த ஆண்டு முதன்முறையாக டிஎன்பிஎல் போட்டியில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதேபோல, இந்த வருட ஐபிஎல் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாக்ட் வீரர் முறையும் டிஎன்பில் போட்டியில் பயன்படுத்தப்படவுள்ளது.
பிளேஆஃப் சுற்று மற்றும் இறுதி ஆட்டங்களுக்கு ரிசர்வ் டேயும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 அணிகள் மோதவுள்ள இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ. 1.7 கோடியாகும். முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ. 50 லட்சமும் இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 30 லட்சமும் மூன்று மற்றும் நான்காமிடம் பிடிக்கும் அணிகளுக்குத் தலா ரூ. 20 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. டிஎன்பிஎல் போட்டிக்கான டிக்கெட்களை ஆன்லைன் மூலம் வாங்கலாம். ஒரு டிக்கெட்டின் விலை ரூ.200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.