செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இறுதிச் சுற்றில் இந்திய மகளிர் அணி!

இந்த ஆட்டத்தில் 17 ரன்களைக் கொடுத்த பூஜா வஸ்திரகர், 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பூஜா வஸ்திராகர்  •  ICC/Getty Images

பூஜா வஸ்திராகர்  •  ICC/Getty Images

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற முதல் அரையிறுதிச் சுற்றில் இந்திய மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய பந்துவீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது வங்கதேச மகளிர் அணி. இதனால், 17.5 ஓவர்களில் 51 ரன்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது. கேப்டன் நிகர் சுல்தானா 12 ரன்கள் எடுத்தார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்கள்.
வேகப்பந்துவீச்சாளர் அஞ்சலி சர்வானி காயம் அடைந்ததன் காரணமாக மாற்று வீராங்கனையாகத் தேர்வான பூஜா வஸ்திரகர், விளையாடும் அணியில் சேர்க்கப்பட்டார். இந்த ஆட்டத்தில் 17 ரன்களைக் கொடுத்த பூஜா, 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்தார்.
இந்த எளிமையான இலக்கைத் துரத்திய இந்திய மகளிர் அணி 70 பந்துகள் மிதமிருந்த நிலையில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷெஃபாலி 17, ரோட்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் 20 ரன்கள் எடுத்தார்கள். இதன் மூலம் இறுதிச் சுற்றுக்குள் இந்திய மகளிர் அணி நுழைந்துள்ளது. ஆகவே, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.
நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் இந்திய கேப்டனான ஹர்மன்ப்ரீத் கெளர் மீண்டும் களமிறங்கவுள்ளார். நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக இரு ஆட்டங்களுக்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இலங்கை - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான 2-வது அரையிறுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் இந்தியா இறுதிச் சுற்றில் மோதவுள்ளது.