ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: தங்கம் வென்று இந்திய மகளிர் அணி சாதனை!
டிடாஸ் சாது வெறும் 6 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.
ESPNcricinfo staff
25-Sep-2023
இந்திய மகளிர் அணி • AFP/Getty Images
19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
ஹாங்சோவில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் இந்திய மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிற்கு ஹர்மன்பிரீத் கெளர் திரும்பினார். வங்கதேச தொடரில் சர்ச்சைக்குரிய விதத்தில் நடந்துகொண்டதாக அவருக்கு இரண்டு ஆட்டங்களில் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்களில் பங்கேற்கவில்லை.
அரையிறுதியில் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா இந்த ஆட்டத்தில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மந்தனா - ரோட்ரிக்ஸ் இணை நிலைத்து விளையாடி 67 பந்துகளில் 73 ரன்கள் குவித்தது.
அரை சதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மந்தனா 46 ரன்களிலும் ரோட்ரிக்ஸ் 42 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். ரிச்சா கோஷ், ஹர்மன்பிரீத் கெளர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளைப் பறிகொடுக்க, இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது.
இந்த இலக்கைத் துரத்திய இலங்கை முதல் ஓவரிலேயே அதிரடியை வெளிப்படுத்தியது. தீப்தி சர்மா வீசிய அந்த ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸரை விளாசினார் இலங்கை கேப்டன் சமாரி அதப்பத்து. இருப்பினும், 3-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கை கொடுத்தார் டிடாஸ் சாது.
அதப்பத்து அதிரடியாகத் தொடங்கினாலும், டிடாஸ் சாது வீசிய 5-வது ஓவரில் ஆட்டமிழந்தார். முதல் 5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்த இலங்கை பின்னர் சுதாரித்து விளையாடியது. வஸ்திராகர் வீசிய 6-வது ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்தார் ஹாசினி பெரேரா.
22 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த ஹாசினி 10-வது ஓவரில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் எடுத்தது இலங்கை. அதன்பிறகு ஜோடி சேர்ந்த நிலாக்ஷி டி சில்வா - ஓஷாதி ரனசிங்கே நிதானமாக விளையாடினார்கள். இலங்கைக்கு நம்பிக்கையளித்த இந்த இணையை 17-வது ஓவரில் பிரித்தார் வஸ்திராகர். 23 ரன்கள் எடுத்த டி சில்வா ஆட்டமிழக்க, அடுத்த ஓவரில் ரனசிங்கேவும் நடையைக் கட்டினார். அதன்பிறகு இலங்கைக்கு ஒரு பவுண்டரி கூட கிடைக்கவில்லை.
இதனால் இந்தியா பக்கம் வெற்றியின் வெளிச்சம் பிரகாசமாக வீசியது. கடைசி ஒரு ஓவர்களில் மேலும் இரண்டு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது இலங்கை. இறுதியில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 97 ரன்களை மட்டுமே இலங்கையால் எடுக்க முடிந்தது.
இதன்மூலம் 19 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றியது இந்திய மகளிர் அணி. டிடாஸ் சாது வெறும் 6 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.