செய்திகள்

குல்தீப் யாதவ் குறித்த கேள்விக்கு இன்ஸமாமின் சுவாரஸ்ய பதில்!

ஷதாப் மற்றும் நவாஸ் கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக விளையாடுவதாக இன்ஸமாம் தெரிவித்துள்ளார்.

இன்சமாம் உல் ஹக்  •  Associated Press

இன்சமாம் உல் ஹக்  •  Associated Press

உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் சுழற்பந்துவீச்சுப் பொறுப்பு முஹமது நவாஸ் மற்றும் ஷதாப் கானிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் தேர்வுக்குழுத் தலைவர் இன்ஸமாம் உல் ஹக்கிடம் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் குல்தீப் யாதவின் புள்ளி விவரங்களை ஒப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதில் அளித்த இன்ஸமாம், நீங்கள் புள்ளி விவரங்களை முன்வைத்துள்ளீர்கள். ஆனால் என்னால் குல்தீப் யாதவை பாகிஸ்தான் அணியில் சேர்க்க முடியாது. ஏனெனில் அவர் இந்திய வீரர் எனச் சொன்னதும் அரங்கில் கூடியிருந்த அனைவரும் சிரித்துவிட்டார்கள்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: தொடர்ச்சியாக விளையாட வாய்ப்பளிக்க வேண்டும் என்ற முறையில் ஷதாப் மற்றும் நவாஸை தேர்ந்தெடுத்துள்ளோம். உலகக் கோப்பைக்கான அணி பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. திடீரென்று மாற்றங்களைச் செய்ய முடியாது. ஷதாப் மற்றும் நவாஸ் ஆகிய இருவருமே கடந்த இரண்டு ஆண்டுகளாக பாகிஸ்தானுக்காக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் சமீபமாக விக்கெட்டுகளை வீழ்த்தி தங்கள் திறமைக்கு ஏற்ப விளையாடவில்லை. இருப்பினும், அவர்கள் கடந்த காலங்களில் நன்றாக விளையாடியுள்ளார்கள். அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றார்.
உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி பாபர் ஆஸம் (கேப்டன்), ஃபக்கார் ஸமான், இமாம் உல் ஹக், அப்துல்லா ஷஃபிக், முஹமது ரிஸ்வான், செளத் ஷகீல், இஃப்திகார் அஹமது, சல்மான் அலி, ஷதாப் கான், உசாமா மிர், முஹமது நவாஸ், ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப், முஹமது வாசிம் ஜூனியர், ஹசன் அலி.