ஆட்டங்கள் (7)
உலகக் கோப்பை (1)
WC Warm-up (2)
Asian Games (M) (1)
IND v ஆஸி (3)
செய்திகள்

பதிரனாவுக்காக நேரத்தை வீணடித்தாரா தோனி?

தோனியின் இந்தச் செயலுக்கு நடுவர்கள் அபராதம் விதிப்பார்களா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

கிறிஸ் கஃபனேவுடன் உரையாடும் எம்எஸ் தோனி  •  BCCI

கிறிஸ் கஃபனேவுடன் உரையாடும் எம்எஸ் தோனி  •  BCCI

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் பதிரனா ஓவர் வீசுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி வேண்டுமென்றே 4 நிமிடங்களை வீணடித்தாரா என்கிற கேள்வி பேசுபொருளாகியுள்ளது.
குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தின்போது மதீஷா பதிரனா 12-வது ஓவரை வீசினார். இதன்பிறகு, தனது இரண்டாவது ஓவரை 16-வது ஓவரில் வீச வந்தார். இடையில், 8 நிமிடங்கள் களத்திலிருந்து வெளியேறியிருந்தார்.
விதிப்படி ஒரு வீரர் எத்தனை நிமிடங்கள் களத்தில் இல்லாமல் இருக்கிறாரோ, பந்துவீசுவதற்கு முன்பு அதே அளவிலான நிமிடங்களை மீண்டும் களத்தில் செலவிட வேண்டும். மீண்டும் களத்துக்குத் திரும்பிய பதிரனா பந்துவீச, இன்னும் நான்கு நிமிடங்கள் களத்திலிருக்க வேண்டும் எனக் கூறி நடுவர் அனில் சௌத்ரி அவரைத் தடுத்திருக்கிறார்.
இதைப் பார்த்த எம்எஸ் தோனி, ஸ்கொயர் லெக் நடுவர் கிறிஸ் கஃபனேவிடம் விளக்கம் கேட்டார். பதிரனா பந்துவீச காத்திருக்க வேண்டும் என நடுவர்கள் விளக்கமளித்த பிறகு, தற்போதைய நிலையில் பதிரனாவைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என தோனி கூறியிருக்கிறார். அப்போது ரவீந்திர ஜடோ, மஹீஷ் தீக்‌ஷனா, தீபக் சஹார் ஆகியோர் தலா நான்கு ஓவர்களை வீசிவிட்டார்கள். துஷார் தேஷ்பாண்டேவுக்கு இரு ஓவர்களும் பதிரனாவுக்கு மூன்று ஓவர்களும் மீதமிருந்தன.
மொயீன் அலி பந்துவீசவில்லை. இருந்தாலும், இரு வலது கை பேட்டர்கள் இருக்கும்போது, ஆஃப் ஸ்பின்னரை பந்துவீசவைக்க முடியாது என கஃபனேவிடம் தோனி கூறியதாகத் தெரிகிறது.
நேரம் வீணாவதைக் கவனித்த நடுவர்கள், குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓவர்கள் வீசப்படவில்லை என அபராதம் விதிக்கப்படும், ஆட்டத்திலும் கடைசி ஓவரில் வட்டத்துக்கு வெளியே நான்கு ஃபீல்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என நினைவுபடுத்தியுள்ளார்கள்.
தோனி, நடுவர்கள் இடையிலான இந்த ஆலோசனை நான்கு நிமிடங்களுக்கு நீடித்தது. இந்த நான்கு நிமிடங்களில் பதிரனா களத்துக்கு வெளியே சென்ற நேரமும், களத்திலிருக்க வேண்டிய நேரமும் சீரானது. இதன்பிறகு, 16-வது ஓவரை வீச பதிரனா அனுமதிக்கப்பட்டார். இந்த ஓவரில் 13 ரன்களைக் கொடுத்த பதிரனா, இதற்கு அடுத்த ஓவரில் விஜய் சங்கர் விக்கெட்டை வீழ்த்தினார்.
தோனி கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது அபராதத்தில் முடியவில்லை. இருந்தபோதிலும், கடைசி ஓவரில் நான்கு ஃபீல்டர்கள் மட்டுமே வெளியே அனுமதிக்கப்பட்டார்கள். குஜராத்தின் முக்கியமான பேட்டர்கள் ஆட்டமிழந்ததால், சென்னைக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
தோனியின் இந்தச் செயலுக்கு நடுவர்கள் அபராதம் விதிப்பார்களா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆடுகளத்தில் வேண்டுமென்ற நேரம் வீணடிக்கப்பட்டால், விதி 41.9-ன் கீழ், ஃபீல்டிங் கேப்டனுக்கு முதலும், இறுதியுமாக எச்சரிக்கை கொடுக்க வேண்டும். இதே தவறு மீண்டும் நேரிட்டால், பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும், பந்துவீச்சாளர் இடைநீக்கம் செய்யப்படுவார். இது முழுக்க நடுவர்களின் முடிவுக்கு உட்பட்டது.
தோனியின் இந்தச் செயல் எதிர்காலத்தில் மற்ற அணிகளிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களும் இதுபோல செய்ய வாய்ப்புள்ளது. எனவே ஐபிஎல் நிர்வாகம் இந்த விவகாரத்தை எப்படி அணுகப் போகிறது எனப் பார்க்கலாம்.