வாழ்த்து மழையில் நனையும் ஷுப்மன் கில்!
ஷுப்மன் கில் 60 பந்துகளில் 129 ரன்களைக் குவித்தார். இதன் மூலம் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் 851 ரன்களுடன் முதலிடம் பிடித்துள்ளார் கில்.
ESPNcricinfo staff
26-May-2023
சதம் அடித்த மகிழ்ச்சியில் ஷுப்மன் கில் • Associated Press
மும்பைக்கு எதிரான குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் சதம் அடித்த ஷுப்மன் கில்லை முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஐபிஎல் 2023 போட்டியில் கடைசி நேரத்தில் பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்த மும்பை அணி எலிமினேட்டர் சுற்றில் லக்னெளவை வீழ்த்தியது. இதன்மூலம் குவாலிஃபையர் 2-ல் குஜராத்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய குஜராத் அணி 233 ரன்களைக் குவித்தது.
குஜராத்தின் ஷுப்மன் கில் 60 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 129 ரன்களைக் குவித்தார். இதன் மூலம் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் 851 ரன்களுடன் முதலிடம் பிடித்துள்ளார் கில். இதன்மூலம் ஆரஞ்ச் கேப்பைப் பெற்ற பிறகு அவர் பேசியதாவது: இதை நான் அணிவேன் என எதிர்பார்க்கவில்லை. ஓய்வறைக்குச் சென்று எனது முடியை சரி செய்துகொண்டேன். அதை அணிவது அற்புதமான உணர்வாக இருந்தது. முதலிரண்டு ஓவர்களில் பந்து நின்று வந்தது. அதன்பிறகு ஆடுகளத்தில் புற்கள் இல்லாததால் பேட்டிற்குப் பந்து நன்றாக வந்தது. வெளிப்புற மைதானம் ஈரமாக இருந்ததால் பந்து ஸ்விங் ஆகவில்லை. இதனால் நாங்கள் எங்களது இன்னிங்ஸை எளிமையாகத் தொடர்ந்தோம் என்றார்.
மைதானத்தின் அளவுகளைப் பயன்படுத்திக்கொள்வது குறித்துப்பேசிய கில்," ஒரு பேட்டராக மைதானத்தின் எந்தப் பக்கத்தில் அடிக்க வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டும். மைதானத்தின் நீளமான பக்கம் என்றால் 2 ரன்களை எடுக்க வேண்டும். சிறிய பக்கம் என்றால் அதை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.
கில்லின் இந்த அதிரடி சத்த்தைப் பாராட்டியுள்ள ஏபி டிவில்லியர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,"எப்போது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என அவருக்கிருக்கும் புரிதலும் அவருடைய தொடர்ச்சியான பங்களிப்பும் அவரை தனித்துவமான வீரராக மாற்றுகிறது. பெரிய மைதானமான அகமதாபாதில் அவர் தனது பெரும்பாலான ஆட்டங்களை விளையாடியுள்ளார். அருமையாக விளையாடினீர்கள் கில்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில்,"கடைசி 4 ஆட்டங்களில் 3-ல் சதம் அடித்துள்ளார் கில். ஜாம்பவான்களைப் போல அவருடைய தொடர்ச்சியான பங்களிப்பும் ஆர்வமும் ஆச்சர்யமளிக்கிறது. தன்னுடைய முழுத் திறமையையும் கில் வெளிப்படுத்தியுள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில்,"இளம் மேஸ்ட்ரோவான கில்லிடம் இருந்து இன்னொரு அட்டகாசமான சதம். இந்தியாவின் கிரிக்கெட் எதிர்காலம் பிரகாசமாக ஒளிர்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.