என்னால் தூங்கவே முடியவில்லை.. இறுதி ஓவர் குறித்து மனம் திறந்த மோஹித் சர்மா!
ஆட்டம் முடிந்தபிறகு குஜராத் அணியின் பயிற்சியாளர் நெஹ்ரா, கேப்டன் ஹார்திக் பாண்டியா ஆகியோர் மோஹித் சர்மாவை சமாதானம் செய்தனர்.
ESPNcricinfo staff
01-Jun-2023
மோஹித் சர்மா • Associated Press
ஐபிஎல் என்றாலே கடைசி நேர த்ரில்லர்களுக்கு பஞ்சம் இருக்காது. இருப்பினும், ஐபிஎல் 2023 இறுதி ஆட்டம் ரசிகர்களின் இதயத் துடிப்பையே எகிறச் செய்துவிட்டது.
கடைசி இரண்டு பந்துகளுக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட போது ஒரு சிக்ஸரும் பவுண்டரியும் விளாசி சென்னைக்கு 5-வது ஐபிஎல் கோப்பையைப் பெற்றுக்கொடுத்தார் ஜடேஜா. இந்தக் கொண்டாட்டங்கள் ஒருபக்கம் இருந்தாலும், இந்தப் பருவம் முழுவதுமே குஜராத்தின் ஸ்டார் பந்துவீச்சாளராகத் திகழ்ந்த மோஹித் சர்மா கடைசி இரண்டு பந்தில் வெற்றியைப் பறிகொடுத்ததால் சோகமானார். ஆட்டம் முடிந்தபிறகு ஹார்திக் பாண்டியா, நெஹ்ரா ஆகியோர் அவரை சமாதனம் செய்வது கிரிக்கெட் ரசிகர்களையும் சோகமடையச் செய்தது.
இந்நிலையில், கடைசி ஓவர் அனுபவம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸிடம் மோஹித் சர்மா பேசுகையில்,"நான் என்ன செய்யவேண்டும் என்பதில் தெளிவாகவே இருந்தேன். வலைப் பயிற்சியின்போதும் இதற்கு முன்னர் சில ஆட்டங்களிலும் இதே போன்ற சூழ்நிலையில் இருந்திருக்கிறேன். ஆகவே, அனைத்து பந்துகளையும் யார்க்கர்களாக வீசுவது என முடிவெடுத்தேன்" என்றார்.
கடைசி இரண்டு பந்துகளை வீசுவதற்கு முன்பாக ஹார்திக் உள்ளிட்ட வீரர்கள் மோஹித் சர்மாவுடன் பேசினர். அதுபற்றி மோஹித் பேசுகையில்,"அப்போது என்னுடைய திட்டம் என்ன என்பது குறித்து அவர்கள் கேட்டனர். யார்க்கர்களையே மீண்டும் வீசப்போவதாகக் கூறினேன். ரசிகர்கள் இப்போது பலவிதமான விஷங்களைக் கூறிவருகின்றனர். ஆனால் அர்த்தமில்லாத பேச்சுக்கள் அவை. என்ன செய்யவேண்டும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. யார்க்கரையே வீச முயன்றேன். இந்த ஐபிஎல் முழுவதும் இதையே நான் செய்திருக்கிறேன். ஆனால், பந்து தவறான இடத்தில் விழுந்தது. இருப்பினும், என்னால் முடிந்த அளவு முயற்சித்தேன்" என்றார்.
ஆட்டம் முடிந்தபிறகு குஜராத் அணியின் பயிற்சியாளர் நெஹ்ரா, கேப்டன் ஹார்திக் பாண்டியா ஆகியோர் மோஹித் சர்மாவை சமாதானம் செய்தனர். அது ஏற்படுத்திய தாக்கம் குறித்துப் பேசிய அவர்,"என்னால் தூங்கவே முடியவில்லை. அந்தப் பந்தை எப்படி வீசியிருக்க வேண்டும் என யோசிக்கிறேன். இது நல்ல உணர்வாக இல்லை. எங்கேயோ தவறு நிகழ்ந்துவிட்டது. இதைக் கடந்து செல்ல முயற்சிக்கிறேன். இனி என்ன நடக்கப்போகிறது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் இந்தப் பயணத்தை நிறைவாகவே அனுபவித்தேன்" என்றார்.