செய்திகள்

தோனி சொன்னால் என்ன வேண்டுமானாலும் செய்வேன்: துஷார் தேஷ்பாண்டே உருக்கம்!

இளம் வீரர்களுக்குத் தேவையான உறுதியை தோனி வழங்கத் தவறுவதில்லை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் துஷார் தேஷ்பாண்டே.

தோனி மற்றும் துஷார் தேஷ்பாண்டே  •  BCCI

தோனி மற்றும் துஷார் தேஷ்பாண்டே  •  BCCI

ஐபிஎல் 2023 கோப்பையை சென்னை அணி ஏந்திய தருணம் இன்னும் பல ஆண்டுகளுக்கு ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கும். இளம் படையைக் கொண்டு வெற்றியின் வாசலை உடைத்துத் திறந்திருக்கிறார் தோனி.
தோல்வியுடன் ஆரம்பித்த இந்த ஐபிஎல் போட்டியை மாபெரும் வெற்றியுடன் முடித்திருக்கிறது சென்னை. அந்த அணியின் வீரர்கள் ஒவ்வொரு முறை துவளும் போதும் தோனியின் கரங்கள் அவர்களுக்காக நீண்டிருக்கின்றன. இதைப் பலமுறை சிஎஸ்கே வீரர்கள், வர்ணனையாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். அந்த வகையில் தற்போது தோனி குறித்து மனம் திறந்திருக்கிறார் ஷிவம் துபே.
ஐபிஎல் 2023 போட்டியில் 16 ஆட்டங்களில் விளையாடிய துபே 418 ரன்களைக் குவித்துள்ளார். அவருடைய ஸ்டிரைக் ரேட் 158.33 ஆகும். சென்னை அணிக்காக இந்தப் பருவத்தில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் துபே மூன்றாம் இடத்தில் உள்ளார். நடு ஓவர்களில் சிக்ஸர்களைப் பறக்கவிடும் துபேவிடம் ஆரம்பத்திலேயே அவருக்கு ஒதுக்கப்பட்ட பணி என்ன என்பது குறித்து விளக்கியுள்ளார் தோனி.
இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தோனி குறித்துப் பேசிய துபே,"அவர் (தோனி) அடுத்த ஆண்டு விளையாடுவாரா மாட்டாரா என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால், எங்களுக்கு அவர் தேவை. அவருடைய தலைமையின் கீழ் வளர ஆசைப்படுகிறோம். தோனி எனக்குத் தெளிவான பார்வையைக் கொடுத்தார். எனக்குக் கொடுக்கப்பட்ட பணி எளிதானது. ரன் ரேட்டை அதிகரிக்க வேண்டும். ஒருவேளை அவுட் ஆனாலும் பரவாயில்லை. ஆனால் அடுத்த போட்டியில் அதற்காக மீண்டும் உழைக்க வேண்டும். இதை என்னிடம் தெளிவாகக் கூறியிருந்தார் தோனி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் 2023 போட்டியில் சென்னை அணிக்காக 21 விக்கெட்டுகளை வீழ்த்திய துஷார் தேஷ்பாண்டேவிற்கும் ஆரம்ப ஆட்டங்களில் சரிவு இருக்கத்தான் செய்தது. ஆனாலும் கடைசிவரை அவருக்கு வாய்ப்பளித்தார் தோனி. இந்நிலையில் தோனி குறித்து தேஷ்பாண்டே இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில்,"நான் ஒருமுறை சரியாகப் பந்து வீசாதபோது என்னிடம் கவலைப்படாதே என்று கூறினார். தளர்ந்து போக வேண்டாம்; செயல்முறையைத் தொடரும்படி சொன்னார். அவர் எப்போதுமே தெளிவுடன் பேசுபவர். இளம் வீரர்களுக்குத் தேவையான உறுதியை அவர் வழங்கத் தவறுவதில்லை" என்றார்.
தோனி தன்னமலற்றவர் எனக் கூறிய துஷார் தேஷ்பாண்டே,"தோனியிடம் திட்டங்கள் மிகத் தெளிவாக இருக்கும். அதைச் செயல்படுத்த சரியான நபரைத் தேர்ந்தெடுப்பார். சுதந்திரமும் கொடுப்பார். தேவை என்றால் மட்டுமே அதுகுறித்துப் பேசுவார். ஆழமாக மூச்சுவிடு, மனதை அமைதியாக வைத்துக்கொள் இன்னும் நிறைய உயரங்களை அடைய உன்னிடம் திறமை இருப்பதாக என்னிடம் கூறுவார். விஷயங்கள் நமக்குச் சாதகமாக நடக்காதபோது வழிகாட்டவும், ஒளியைக் காட்டவும் நம்முடன் ஒருவர் இருப்பார். என்னைப் பொறுத்தவரையில் எனக்கு அது தோனி தான். அவர் ஒரு தன்னலமற்ற மனிதர். உங்கள் மோசமான நேரங்களில் உங்களுடன் இருப்பார். ஒரு ராணுவ வீரரைப் போல அவர் என்ன சொன்னாலும் அப்படியே பின்பற்றுவேன். அவர் என்னை ஒருபோதும் தவறான பாதையில் அழைத்துச் செல்ல மாட்டார் என்பது எனக்குத் தெரியும்" என்றார்.