செய்திகள்

தோனிக்கு அறுவை சிகிச்சை நிறைவு!

இறுதி ஆட்டத்துக்குப் பிறகு மும்பை திரும்பிய தோனி புகழ்பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். தின்ஷா பர்திவாலாவைச் சந்தித்தார்.

எம்.எஸ். தோனி  •  BCCI

எம்.எஸ். தோனி  •  BCCI

தோனிக்கு இன்று (வியாழக்கிழமை) வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
ஐபிஎல் 2023 போட்டி முழுவதும் தோனி இடது முழங்கால் காயத்துடன் அவதிப்பட்டு வந்தார். பயிற்சி வேளையின்போது, காலில் பிரத்யேக காப்புடன் தோனி வலம் வந்தார். இதன் காரணமாக கீழ் வரிசையிலேயே அவர் பேட்டிங்கும் செய்தார்.
இதுகுறித்து நேற்று பிடிஐ-யிடம் பேசியிருந்த சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் முழங்கால் காயம் குறித்து தோனி மருத்துவரிடம் ஆலோசனை பெறுவார் எனவும் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டால் தோனியே அதுகுறித்து முடிவெடுப்பார் எனவும் தெரிவித்திருந்தார். இறுதி ஆட்டத்துக்குப் பிறகு மும்பை திரும்பிய தோனி புகழ்பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் பிசிசிஐ மருத்துவக் குழுவின் உறுப்பினருமான டாக்டர். தின்ஷா பர்திவாலாவைச் சந்தித்தார்.
இந்நிலையில், மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் தோனிக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருக்கிறது. இதுகுறித்து சிஎஸ்கே அணி தரப்பிலிருந்து பிடிஐ-யிடம் தெரிவிக்கப்பட்ட தகவலில்," மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தோனிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை நிறைவடைந்தது. அவர் நலமுடன் உள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். அவரது மறுவாழ்வுப் பயிற்சி தொடங்குவதற்கு முன்பு அவர் சில நாட்கள் ஓய்வெடுப்பார். அடுத்த ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்கான உடற்தகுதியைப் பெற அவருக்கு போதுமான நேரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.