செய்திகள்

பார்வையாளர்கள் இன்றி நடைபெறவுள்ள பாகிஸ்தான் - நியூசிலாந்து பயிற்சி ஆட்டம்!

இந்த ஆட்டத்திற்கான டிக்கெட்டை வாங்கியவர்களுக்கு முழுத் தொகையும் திருப்பியளிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம்  •  PCB

நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம்  •  PCB

இந்தியாவில் உலகக் கோப்பை அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரையில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்கள் திருவனந்தபுரம், கெளஹாத்தி மற்றும் ஹைதராபாதில் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 3 வரையில் நடைபெறுகின்றன.
செப்டம்பர் 29-ல் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் ஹைதராபாதில் நடைபெறுகிறது. அதே நாளில் ஹைதராபாதில் முக்கிய பண்டிகைகளும் கொண்டாடப்படுகிறன. இதன் காரணமாக இந்த ஆட்டத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிக்கல்கள் ஏற்படலாம் என உள்ளூர் காவல்துறை ஹைதராபாத் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து பிசிசிஐ-க்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தது ஹைதராபாத் கிரிக்கெட் வாரியம். அதில், இந்த ஆட்டத்தை பார்வையாளர்கள் இன்றி நடத்த பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பிசிசிஐ குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
செப்டம்பர் 29-ல் ஹைதராபாதில் நடைபெறும் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான பயிற்சி ஆட்டத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்த ஆட்டம் நடைபெறும் நாளில் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஆகவே நகரம் முழுவதும் மக்கள் கூட்டம் அதிகமிருக்கும் என்பதால் உள்ளூர் பாதுகாப்பு நிறுவனங்களின் ஆலோசனைப்படி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்திற்கான டிக்கெட்டை வாங்கியவர்களுக்கு முழுத் தொகையும் திருப்பியளிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.