செய்திகள்

செப்டம்பர் 25: ஹன்சி குரோனியே பிறந்தநாள்!

தலைசிறந்த கேப்டனாக மட்டுமில்லாமல் சூதாட்டம் என்றவுடன் ரசிகர்களின் நினைவுக்கு எட்டும் முதல் முகமாகவும் வரலாற்றில் குரோனியே எஞ்சியுள்ளார்.

ஹன்சி குரோனியே  •  AFP

ஹன்சி குரோனியே  •  AFP

தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஹன்சி குரோனியேவின் பிறந்த தினம் இன்று. 1969-ல் ப்ளூம்ஃபோன்டைனில் ஒரு கிரிக்கெட் குடும்பத்தில் பிறந்த குரோனியே, 24 வயதிலேயே தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பொறுப்புக்கு உயர்ந்தார். 1992 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமான அவர், திறமையான ஆல்ரவுண்டர் என்று போற்றப்பட்டார்.
1992-ல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மறு அறிமுகமான தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்ற குரோனியே, தனது முதல் டெஸ்ட் சதத்தை இந்தியாவுக்கு எதிராக அடித்தார். சச்சின் டெண்டுல்கருக்கு கடுமையான நெருக்கடி கொடுத்த ஒரே மிதவேகப்பந்து வீச்சாளர் குரோனியே தான். டெஸ்டில் 5 முறை சச்சின் விக்கெட்டை குரோனியே, சர்வதேச கிரிக்கெட்டில் 157 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஹன்சி குரோனியே தலைமையேற்ற 57 டெஸ்டுகளில் தென்னாப்பிரிக்க அணி 27-ல் வெற்றி பெற்றது. கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான குரோனியே, 138 ஒருநாள் ஆட்டங்களுக்கு தலைமையேற்று 99-ல் வெற்றியை ஈட்டிக் கொடுத்தார். குரோனியே தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி 1996 உலகக் கோப்பையில் காலிறுதிக்கும் 1999 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கும் முன்னேறியது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தியவர் குரோனியே. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 39 ஒருநாள் ஆட்டங்களில் 2 சதங்கள் மற்றும் 9 அரை சதங்கள் உடன் 47 சராசரியில் 1,364 ரன்களைக் குவித்தார். 19 முறை ஆட்ட நாயகன் விருதை வென்ற அவர், ஒருநாள் ஆட்டத்தில் ஐந்து அல்லது அதற்கும் அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது தென்னாப்பிரிக்க வீரர் என்ற சிறப்புக்கு உரியவர்.
2000-ல் சூதாட்டப் புகாரில் சிக்கிய குரோனியே, தனது மாண்பையும் மதிப்பையும் இழந்தார். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. ஹன்சி குரோனியே ஒரு மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர், மிகச் சிறந்த தலைவர் என்று புகழாரம் சூட்டினார் கேரி கிர்ஸ்டன். 2002-ல், கோரமான விமான விபத்தில் சிக்கிய குரோனியே 32-வது வயதில் அகால மரணமடைந்தார்.
கிரிக்கெட் உலகின் தலைசிறந்த கேப்டனாக மட்டுமில்லாமல் சூதாட்டம் என்றவுடன் ரசிகர்களின் நினைவுக்கு எட்டும் முதல் முகமாகவும் வரலாற்றில் குரோனியே எஞ்சியுள்ளார்.
பிஷன் பேடி பிறந்தநாள்!
இந்தியாவின் மகத்தான இடக்கைச் சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் பேடி, தனது 76-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
1960, 70களில் சந்திரசேகர், பிரசன்னா, வெங்கட்ராகவன், பேடி ஆகியோர் இணைந்து சுழற்பந்து வீச்சில் இந்திய அணிக்குப் பல மகத்தான டெஸ்ட் வெற்றிகளை இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் அளித்தார்கள்.
67 டெஸ்டுகளில் விளையாடிய பிஷன் பேடி, 266 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 10 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். 370 முதல்தர ஆட்டங்களில் விளையாடி, 1560 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேறு எந்த இந்தியப் பந்துவீச்சாளரும் முதல்தர கிரிக்கெட்டில் இத்தனை விக்கெட்டுகளை எடுத்ததில்லை.
பந்துகளை ஃபிளைட் செய்து அதன்மூலமாக பேட்டர்களை உசுப்பேற்றி விக்கெட்டுகள் எடுப்பது பேடியின் வழக்கம். 22 டெஸ்டுகளில் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.
1983 உலகக் கோப்பைக்கான இந்திய அணியைத் தேர்வு செய்த தேர்வாளர்களில் பேடியும் ஒருவர்.