செய்திகள்

உலகக் கோப்பை: இந்திய விசாவுக்காகக் காத்திருக்கும் பாகிஸ்தான் அணி!

பாகிஸ்தானைத் தவிர்த்து மற்ற 8 நாடுகளுக்கும் இந்தியா வருவதற்கான விசா கிடைத்துவிட்டது.

பாகிஸ்தான் அணி  •  Getty Images

பாகிஸ்தான் அணி  •  Getty Images

இந்தியாவில் உலகக் கோப்பைப் போட்டி வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரையில் நடைபெற உள்ளது.
உலகக் கோப்பைக்கு முன்னர் இதில் கலந்துகொள்ளும் 10 அணிகளும் தலா இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன. தற்போதைய நிலையில் பாகிஸ்தானைத் தவிர்த்து மற்ற 8 நாடுகளுக்கும் இந்தியா வருவதற்கான விசா கிடைத்துவிட்டது.
முன்னதாக, அடுத்த வாரத் தொடக்கத்தில் லாகூரில் இருந்து துபாய் சென்று அங்கே இரண்டு நாள் பயிற்சிக்குப் பிறகு இந்தியா வர பாகிஸ்தான் அணி திட்டமிட்டது. ஆனால் தற்போது விசா கிடைக்கத் தாமதம் ஆகும் நிலையில் இந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அடுத்த புதன் அன்று, லாகூரிலிருந்து துபாய் செல்லும் பாகிஸ்தான் அணி அங்கிருந்து ஹைதராபாத் செல்லத் திட்டமிட்டுள்ளது. ஒரு வாரம் முன்பே விசாவுக்கு விண்ணப்பித்த நிலையில் இதுவரையில் பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்கப்படவில்லை. சரியான நேரத்தில் விசா கிடைக்குமா என்கிற பதற்றம் பாகிஸ்தான் அணியினரிடையே ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிவரும் அரசியல் கருத்து வேறுபாடுகள் இந்தச் சூழலின் பின்னணியாக உள்ளது. ஆசியக் கோப்பை 2023 போட்டியிலும் இதே போன்ற சிக்கலை இரு நாட்டு அணிகளும் சந்தித்தன. போட்டி முழுமையாக நடைபெற இருந்த பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்கள் பயணிக்க இந்திய அரசு அனுமதிக்கவில்லை. பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இலங்கை மற்றும் பாகிஸ்தானில் அந்தப் போட்டி நடைபெற்றது. இந்திய அணி தனது ஆட்டங்களை இலங்கையில் மட்டுமே விளையாடியது.
அரசியல் சூழ்நிலைகளால் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சுற்றுப்பயணங்களும் நிகழவில்லை. கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற 2016 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்றது.
ஆசியக் கோப்பையைப் போல உலகக் கோப்பையிலும் பாகிஸ்தான் விளையாடும் ஆட்டங்களை வங்கதேசத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்னதாக யோசனை தெரிவித்தது. இருப்பினும் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்குப் பயணிக்க கடந்த ஆகஸ்டில் அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், உலகக் கோப்பையில் பங்கேற்க விசாவுக்காக காத்திருக்கிறது பாகிஸ்தான் அணி.