செய்திகள்

உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்க இந்திய அரசு அனுமதி

பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஐசிசி உறுதி அளித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்கள்  •  ICC via Getty Images

இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்கள்  •  ICC via Getty Images

உலகக் கோப்பையில் பங்கேற்க இந்த வார புதன் கிழமை (செப்டெம்பர் 27) இந்தியாவுக்குப் பயணிக்க பாகிஸ்தான் அணி திட்டமிட்டிருந்தது. பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்க தாமதமான நிலையில், தற்போது அந்த அணிக்கு விசா வழங்க இந்திய அரசு அனுமதியளித்துள்ளதாக ஐசிசி உறுதியளித்துள்ளது.
விசா தாமதம் குறித்து ஐசிசிக்கு கடிதம் ஒன்றையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எழுதியிருந்தது. அதில், உலகக் கோப்பையில் பங்கேற்கும் நாடுகளில் பாகிஸ்தான் மட்டுமே இன்னும் விசாவுக்காக காத்திருப்பதாகவும் இந்த பாரபட்சமான முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த தாமதம் காரணமாக உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் அணி தயாராவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பாகிஸ்தான் வாரியம் எச்சரித்துள்ளது.
ஐசிசி இந்த விஷயத்தில் தலையிட்டு சுமூக தீர்வு காண உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் விசா வழங்கப்படும் என பிசிசிஐ அல்லது இந்திய அரசு எழுத்துப்பூர்வமாக உத்திரவாதம் அளித்துள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
இதனிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு கடிதம் எழுதிய நிலையில், பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஐசிசி உறுதி அளித்துள்ளது.
இதுகுறித்து ஈஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ குழுமத்திடம் பேசிய அரசு செய்தித் தொடர்பாளர் மத்திய உள்துறை அமைச்சகம் பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவதற்கான பாதுகாப்பு அனுமதியை வழங்கிவிட்டது. இது தொடர்பான செயல்முறைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணி இன்றே (திங்கட்கிழமை) விசாவைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அலுவலக நேரம் முடிந்துவிட்டதால் பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்கப்பட்டதா என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை.
விசா தாமதமானது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செய்தித் தொடர்பாளர் உமர் ஃபரூக் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ள பாகிஸ்தான் அணிக்கு இந்திய விசா கிடைப்பதில் வழக்கத்தை விட அதிக தாமதம் ஏற்பட்டுள்ளது. பாரபட்சமாக பாகிஸ்தான் நடத்தப்படுவதைக் குறிப்பிட்டும் உலகக் கோப்பையில் அவர்களுடைய கடமைகளை நினைவூட்டியும் ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளோம்.
உலகக் கோப்பைக்கு முன்பு பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்டுள்ள நிலை ஏமாற்றத்தை அளிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக இதுகுறித்து நினைவூட்டி வருகிறோம். எங்களுடைய பயணம் தொடங்க 2 நாட்களே மீதமுள்ள நிலையில் இன்னும் இந்த சிக்கல் தீர்க்கப்படவில்லை. துபாயில் இரண்டு நாட்கள் பயிற்சி மேற்கொள்ளும் எங்களுடைய திட்டத்தை ரத்து செய்யவேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது. நாங்கள் எங்களுடைய பயணத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். அது எங்களுக்கு விசா கிடைப்பதைப் பொறுத்தது என்றார்.
ஆகஸ்டு இறுதியில் இந்திய விசாவிற்காக விண்ணப்பித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆசியக் கிரிக்கெட் கோப்பைப் போட்டிக்காக இலங்கைக்கு பாகிஸ்தான் அணி பயணித்தது. இதனால் பாகிஸ்தான் அணி வீரர்களின் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க தாமதம் ஆனது. இருப்பினும், செப்டம்பர் 19-ல் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய உடனேயே பாகிஸ்தான் அணி பாஸ்போர்ட்டை சமர்ப்பித்தது.
செப்டம்பர் 27 காலையில் பாகிஸ்தானில் இருந்து துபாய் வழியாக மாலை ஹைதராபாத் செல்ல பாகிஸ்தான் வாரியம் திட்டமிட்டுள்ளது. பயணத்துக்கு 48 மணி நேரங்களே எஞ்சியுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு தற்போது விசா வழங்க இந்திய அரசு அனுமதியளித்துள்ளது. பாகிஸ்தான் செப்டம்பர் 29-ல் நியூசிலாந்துக்கு எதிரான தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது.