ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார் பதிரானா!
டெஸ்ட் கேப்டன் டிமுத் கருணாரத்னேவும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ESPNcricinfo staff
30-May-2023
பதிரானாவுடன் தீக்ஷனா • Associated Press
ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக விளையாடிய பதிரானா கடைசிக் கட்ட ஓவர்களில் அட்டகாசமாக பந்துவீசினார். 12 ஆட்டங்களில் விளையாடிய அவர் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விக்கெட்டுகளைத் தாண்டி, இவர் வீசும் யார்க்கர் பந்துகள், குறைவேகப் பந்துகள் பேட்டர்களைத் திணறடித்து, பவுண்டரிகளைக் கட்டுப்படுத்தி ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை உண்டாக்கின.
இதைக் கவனித்துள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம் பதிரானாவை ஒருநாள் கிரிக்கெட்டில் களமிறக்க முடிவு செய்துள்ளது. சென்னை அணிக்காக விளையாடிய மஹீஷ் தீக்ஷனாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பதிரானா அளவுக்கு இவர் பெரும் தாக்கத்தை உண்டாக்காத போதிலும், முக்கிய ஆட்டங்களில் சென்னை அணிக்கு முக்கிய வீரராகத் திகழ்ந்தார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை விளையாடுகிறது. இதற்கான அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
டெஸ்ட் கேப்டன் டிமுத் கருணாரத்னே இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை வரவிருப்பதால், 2019 உலகக்கோப்பை அணியை வழிநடத்திய அனுபவத்தைக் கருத்தில்கொண்டு இவர் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி:
தசுன் சனகா (கேப்டன்), குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), பதும் நிசன்கா, டிமுத் கருணாரத்னே, ஆஞ்சலோ மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா, சாரித் அசலங்கா, சதீரா சமரவிக்ரமா, சமிகா கருணாரத்னே, துஷான் ஹேமந்தா, வனிந்து ஹசரங்கா, லஹிரு குமாரா, துஷ்மந்தா சமீரா, கசுன் ரஜிதா, மதீஷா பதிரானா, மஹீஷ் தீக்ஷனா.