இந்த உத்தியை முன்பே செயல்படுத்தியிருக்க வேண்டும்: லபுஷேன் விக்கெட் பற்றி அஸ்வின்
பந்து என் கையிலிருந்து வெளிவருவதை அவர்களால் கணிக்க முடியவில்லை..
ESPNcricinfo staff
25-Sep-2023
அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்த லபுஷேன் • Associated Press
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் கேரம் பந்துகளை வீசி விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், இந்த உத்தியை முன்பே பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலிய அணி 9 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. நீண்ட தாமதத்துக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியதால் 33 ஓவர்களில் 217 ரன்கள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
இந்த இடைவெளிக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியவுடன் அஸ்வின் கேரம் பந்துகள் மூலம் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். குறிப்பாக லபுஷேனை அவர் போல்ட் செய்தது அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்த விக்கெட் குறித்து பிசிசிஐ டிவியிடம் அஸ்வின் கூறியதாவது:
"மழையால் ஏற்பட்ட இடைவேளைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவிடம இழப்பதற்கு ஏதுமில்லை. அவர்கள் தீவிரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒவ்வொரு ஓவரிலும் ஒரு பவுண்டரி அடித்தாக வேண்டியிருந்தது.
33 ஓவர்களில் இலக்கை அடைய வேண்டும் என்பது கடினமானது. 50 ஓவர்களில் 400 ரன்கள் என்ற இலக்கை அடைய வேண்டும் என்பதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டது.
சரியான லெங்த்தில் வீச வேண்டும், வேகத்தை மாற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்பதில் எனது முயற்சி இருந்தது. மார்னஸ் லபுஷேன் இதற்கு முன்பு ரிவர்ஸ் ஸ்வீப்புக்கு முயற்சித்தார்.
எனவே, அவர் ரிவர்ஸ் ஸ்வீப் செய்யலாம், ஸ்லாக் ஸ்வீப் செய்யலாம் என்று எதிர்பார்த்தேன். இதற்காக நான் வேகத்தை அதிகரித்தும் குறைத்தும் வீசினேன்.
பந்து என் கையிலிருந்து வெளிவருவதை அவர்களால் கணிக்க முடியவில்லை. பந்து செல்வதற்கான கோணத்தை உருவாக்குவதற்கும், பந்தில் ஒரு பிடித்தம் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கேரம் பந்துக்கும், ஆஃப் ஸ்பின் பந்துக்கும் நான் எனது மூன்றாவது விரலைப் பயன்படுத்துகிறேன்.
தேசிய கிரிக்கெட் அகாடமியில் இதற்கான முயற்சியில் இறங்கினேன். முன்னால் இருந்தும், பின்னால் இருந்தும் இதைக் கவனிக்கச் சொல்லி மூன்று, நான்கு நாள்கள் முயற்சிகளைத் தொடர்ந்தேன்.
இத்தனை வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வரும் நான், இதை முன்பே முயற்சித்திருக்க வேண்டும்.
இறுதியில் பேட்டர் ஏமாந்து பந்தைத் தவறவிடுகிறார் என்றால் அது சிறந்த பந்து. பந்துவீச்சாளரிடமிருந்து இதைத்தான் அனைவரும் எதிர்பார்பார்கள்.
இரண்டு விளிம்புகளிலும் உரசும் வகையில் பந்துவீச வேண்டும் என நினைத்துள்ளேன். அதைத் தற்போது செய்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் இதுதான் மகிழ்ச்சியான விஷயம்" என்றார் அஸ்வின்.