செய்திகள்

ரஷித் கானுக்குக் காயம்: ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கை!

இலங்கை அணியுடனான முதலிரண்டு ஒருநாள் ஆட்டங்களில் ரஷித் கான் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷீத் கான்  •  SA20

ரஷீத் கான்  •  SA20

ஆஃப்கானிஸ்தானின் நட்சத்திர வீரரான ரஷித் கானுக்குக் கீழ் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
அண்மையில் நடந்துமுடிந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் ரஷித் கான். இந்தப் போட்டியில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் அவர். மேலும், இந்தப் போட்டியில் குஜராத் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் மோஹித் சர்மாவுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார் ரஷித் கான்.
ஆஃப்கானிஸ்தான் அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான ஹஸ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் ரஷித் கானும் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், அவருக்குக் கீழ் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் இலங்கைக்கு எதிரான முதலிரண்டு ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"அவர் (ரஷித் கான்) முழு மருத்துவ கண்காணிப்பில் இருப்பார். ஜூன் 7-ம் தேதி நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் 2-ம் தேதி ஆஃப்கானிஸ்தான் - இலங்கை இடையிலான ஒருநாள் தொடர் தொடங்குகிறது. இரண்டு நாட்கள் கழித்து இரண்டாவது ஒருநாள் ஆட்டமும் ஜூன் 7-ம் தேதி இறுதி ஆட்டமும் நடைபெறவுள்ளது. அதன்பிறகு 10 நாட்கள் கழித்து ஆஃப்கானிஸ்தான் அணி வங்க தேசத்துடனான டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் சட்டோகிராம் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஏற்கெனவே ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கு ஆஃப்கானிஸ்தான் நேரடியாகத் தகுதிபெற்றுவிட்ட நிலையில் அதற்கான பயிற்சிகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு எதிரான இந்தத் தொடரில் களமிறங்கவுள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி.