செய்திகள்

நியூசி. ஒருநாள் தொடர்: வங்கதேசத்துக்குப் புதிய கேப்டன்!

உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்று முதலிரு ஒருநாள் ஆட்டங்களில் விளையாடாத முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், டஸ்கின் அஹமது மற்றும் ஷொரிஃபுல் இஸ்லாம் ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளார்கள்.

நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ  •  Associated Press

நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ  •  Associated Press

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்துக்கு வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதலிரு ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய பொறுப்பு கேப்டன் லிட்டன் தாஸ், தமிம் இக்பால், முஸ்தபிஸுர் ரஹ்மான் ஆகியோருக்கு மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
தவிர உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்று முதலிரு ஒருநாள் ஆட்டங்களில் விளையாடாத முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், டஸ்கின் அஹமது மற்றும் ஷொரிஃபுல் இஸ்லாம் ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளார்கள்.
இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டியின்போது ஷாண்டோவுக்குக் காயம் ஏற்பட்டது. காயத்திலிருந்து குணமடைந்துள்ள அவர் அணிக்குத் திரும்பியுள்ளார். உலகக் கோப்பைக்கான அணிக்குத் தேர்வாகியிருப்பதால் ஆசியக் கோப்பைக்குப் பிறகு முதலிரு ஆட்டங்களிலிருந்து முஷ்பிகுர், மெஹிதி, டஸ்கின், ஷொரிஃபுல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது.
காயம் காரணமாக ஆசியக் கோப்பையில் விளையாடாமல், நியூசிலாந்து தொடரின் முதலிரு ஆட்டங்களில் விளையாடிய தமிம் இக்பால், இன்னும் வலி உணர்வு இருப்பதாக இரண்டாவது ஒருநாள் ஆட்டத்துக்குப் பிறகு தெரிவித்தார். இவர் மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் விளையாடவில்லை.
மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட, இரண்டாவது ஆட்டத்தில் நியூசிலாந்து 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஆட்டம் மிர்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
வங்கதேச அணி:
நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), தன்ஸித் ஹசன் தமிம், ஸாகிர் ஹசன், அனாமுல் ஹக் பிஜாய், தௌஹித் ஹிருதாய், மஹமதுல்லா, முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், நசும் அஹமது, டஸ்கின் அஹமது, ஷொரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத், ரிஷத் ஹொசைன்.