ஆட்டங்கள் (7)
உலகக் கோப்பை (1)
WC Warm-up (2)
Asian Games (M) (1)
IND v ஆஸி (3)
செய்திகள்

இனவெறிக் குற்றச்சாட்டு: முன்னாள் இங்கிலாந்து வீரர்களுக்குத் தடை!

இந்த 6 பேருக்கும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஜூன் 9-ம் தேதி வரையில் அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது.

யார்க்‌ஷைர் கிரிக்கெட் கிளப்  •  PA Photos/Getty Images

யார்க்‌ஷைர் கிரிக்கெட் கிளப்  •  PA Photos/Getty Images

இனவெறிக் கருத்துக்களை தெரிவித்ததாக முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உட்பட 6 பேருக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
இங்கிலாந்து கவுண்டி அணியான யார்க்‌ஷைரைச் சேர்ந்த அஸீம் ரஃபிக் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் அதே அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தன்மீது இனவெறி கருத்துக்களைத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்த விசாரணைகள் நடைபெற்றுவந்த நிலையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி கேரி பேலன்ஸ், ஜான் பிலைன், டிம் பிரெஸ்னன், ஆண்ட்ரூ கேல், மேத்யூ ஹோகார்ட் மற்றும் ரிச் பைரா ஆகியோருக்கு அபராதம் மற்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் யார்க்ஷயர் கேப்டனான கேலுக்கு 6000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை 4 வாரங்கள் இடைநீக்கம் செய்துள்ளது ஆணையம். கடந்த மாதம் ஓய்வுபெற்ற கேரி பேலன்ஸ் விசாரணையின் போதே தன்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அவருக்கு 3000 பவுண்டுகள் அபராதமும் 6 ஆட்டங்களில் விளையாட தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ள பிரெஸ்னன், ஹோகார்ட் ஆகியோருக்கு 4000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 4 ஆட்டங்களில் விளையாட பிரெஸ்னனுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஸ்காட்லாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிலைன் மற்றும் பைராவுக்கு 2500 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது. இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கில் வாஹன் மீதான குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதுமட்டும் அல்லாமல் இந்த ஆறு பேரும் இனவாதம் / பாகுபாடு கல்வி பாடத்திட்டத்தை தங்களது சொந்த செலவில் படிக்க வேண்டும் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் அதிகார வரம்பிற்குள் விளையாட / பயிற்சிக்கு திரும்ப விரும்பினால் மட்டுமே தடைகள் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஜூன் 9-ம் தேதி வரையில் அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது.