செய்திகள்

'அஸ்வினுக்கு நன்றி': சிபிஎல் கோப்பையை வென்ற தாஹிர்

ஒரு விஷயம் உங்களுக்குக் கிடைத்தே ஆக வேண்டும் என்றிருந்தால், முதல் குவாலிஃபையரில் தோற்றாலும்கூட அது நிச்சயமாக நடக்கும்...

இம்ரான் தாஹிர்  •  CPL T20 via Getty Images

இம்ரான் தாஹிர்  •  CPL T20 via Getty Images

கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) கோப்பை வென்ற கயானா அமேஸான் வாரியர்ஸ் கேப்டன் இம்ரான் தாஹிர் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சிபிஎல் போட்டியில் 5 முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ள கயானா அணி, 44 வயதுடைய இம்ரான் தாஹிர் தலைமையில் 6-வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி முதல்முறையாகக் கோப்பை வென்றது.
பரிசளிப்பு விழாவில் தாஹிர் கூறியதாவது:
"கயானாவுக்காகவும், எப்போதும் எங்களுக்கு ஆதரவைத் தரும் இந்த அழகான மக்களுக்காகவும் விளையாடுவது மிகச் சிறந்த ஓர் அனுபவம்.
இந்தப் போட்டியில் விளையாட வருவதற்கு முன், நான் கேப்டன் ஆனதற்காக அனைவரும் என்னைக் கேலி செய்தார்கள். அதுதான் எனக்கு உத்வேகம் அளித்தது என நினைக்கிறேன். எனவே, கேலி செய்தவர்களுக்கும், என் குடும்பத்தினருக்கும், அனைத்து வீரர்களினுடைய குடும்பத்தினருக்கும் நன்றி.
எங்களுடைய அணி நிபுணர் பிரசன்னாவுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். தினந்தோறும் 20 மணி நேரம் வேலை பார்த்து எனக்கு அனைத்துத் திட்டங்களையும் வகுத்துக் கொடுப்பார்.
அதேசமயம், இந்தியாவிலிருந்து அஸ்வினுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். நாம் கோப்பையை வெல்வோம் என ஆரம்பத்திலேயே அவர் தெரிவித்தார்" என்றார் தாஹிர்.
அமேஸான் வாரியர்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இருந்தபோதிலும், முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸிடம் தோல்வியடைந்தது. இரண்டாவது குவாலிஃபையரில் ஜமைக்காவை 101 ரன்களுக்கும், இறுதி ஆட்டத்தில் நைட் ரைடர்ஸை 94 ரன்களுக்கும் சுருட்டி வெற்றி கண்டுள்ளது.
இதற்கு ஐந்து முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியும் ஒருமுறைகூட கோப்பை வெல்லாதது பற்றி பேசிய தாஹிர், அதுதான் விஷயமே. ஒரு விஷயம் உங்களுக்குக் கிடைத்தே ஆக வேண்டும் என்றிருந்தால், முதல் குவாலிஃபையரில் தோற்றாலும்கூட அது நிச்சயமாக நடக்கும். முதலில் பேட் செய்தும் வெற்றி பெற்றுள்ளோம், முதலில் பந்துவீசியும் வெற்றி பெற்றுள்ளோம் என்றே டாஸ் நேரத்தில் அனைவரும் பேசிக்கொண்டிருந்தோம். அணியிடம் அந்த நம்பிக்கை இருந்தது என்றார் இம்ரான் தாஹிர்.