இந்திய அணி: மீதமிருக்கும் கேள்விகள்!
அணித் தேர்வு முடிவுகளெல்லாம் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் தலைவலி என்று சாதுர்யமாகப் பதிலளித்து நழுவியிருக்கிறார் கேஎல் ராகுல்.
ESPNcricinfo staff
25-Sep-2023
ராகுல் டிராவிட், ரோஹித் சர்மா • ICC via Getty Images
ஆசியக் கோப்பைக்கு முன்பு வரை இந்திய அணியின் நடுவரிசை பேட்டர்கள் யார் என்ற கேள்வி இருந்தது. அணி நிர்வாகம் காயம் காரணமாக நீண்ட நாள்களாக விளையாடாமல் இருந்து காயத்திலிருந்து குணமடைந்து வந்த ஷ்ரேயஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோரை அணியில் சேர்த்தது. உலகக் கோப்பைக்கு முன்பு இவர்களுக்கு பேட்டிங் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ஆதரவுக் குரல்கள் வலுத்தன.
ராகுல் சிக்கலைத் தீர்த்த ஷ்ரேயஸ்:
காயத்திலிருந்து குணமடையாத கேஎல் ராகுல் ஆசியக் கோப்பையின் முதலிரு ஆட்டங்களில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான லீக் சுற்று ஆட்டத்தில் இஷான் கிஷன் ஐந்தாவது இடத்தில் களமிறக்கப்பட்டார். அதுவும் 66 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறிய நேரத்தில் களமிறக்கப்பட்டார்.
இந்த ஆட்டத்தில் ஹார்திக் பாண்டியாவுடன் இணைந்து, ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப அற்புதமான, முதிர்ச்சியான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் 81 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரோஹித் சர்மாவும், ஷுப்மன் கில்லுமே வெற்றி இலக்கை அடைந்ததால், நடுவரிசைக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.
சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தவுடன் கேஎல் ராகுல் இந்திய அணியுடன் இணைந்தார். இஷான் கிஷன் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால், அவருக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடும் லெவனில் கேஎல் ராகுலுக்கு ஆரம்பத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
டாஸ் போடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, ஷ்ரேயஸ் ஐயரின் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால், கடைசி நேரத்தில் ஷ்ரேயஸுக்குப் பதிலாக நான்காவது வரிசை பேட்டராக ராகுல் களமிறக்கப்பட்டார். காயத்திலிருந்து திரும்பிய பிறகு ராகுல் விளையாடும் முதல் ஆட்டம் என்பதால் எதிர்பார்ப்பு இருந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராகுல் 106 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து தனது பேட்டிங் திறமையை நிரூபித்தார். நான்காவது பேட்டருக்கான இடத்தை உறுதி செய்தார். அதேசமயம், கீப்பிங்கும் செய்து தனது உடற்தகுதியையும் நிரூபித்தார்.
ஷ்ரேயஸ் காயத்தால் ராகுலின் இடம் உறுதியானது.
ஜஸ்பிரித் பும்ரா நம்பிக்கை:
ஜஸ்பிரித் பும்ராவும் காயம் காரணமாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு முதன்முதலாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்பட்டார். இந்தத் தொடரில் இவர் விளையாடியிருந்தாலும், ஆசியக் கோப்பைதான் உடற்தகுதிக்கான சிறந்த களமாக இருந்தது. காரணம், இதுதான் 50 ஓவர் ஆட்டம்.
ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இவர் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்து, தான் நல்ல ரிதத்தில் இருப்பதை உறுதி செய்தார். எனினும், இவர் முழுமையாக 10 ஓவர்களை வீசுவதற்கான சூழல் எழவில்லை.
ஆசியக் கோப்பைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரில் பும்ரா சேர்க்கப்பட்டிருந்தார். மொஹாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இவர் முழுமையாக 10 ஓவர்கள் வீசி உடற்தகுதியையும் நிரூபித்துவிட்டார்.
அக்ஷர் படேல் காயம்: அஸ்வினா, வாஷிங்டனா?
ஆசியக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தின்போது இந்தியாவை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்ற அக்ஷர் படேல் 34 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து கடைசிக்கு முந்தைய ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனால், இந்த இன்னிங்ஸின்போது அவருக்குக் கைகளில் நிறைய காயங்கள் ஏற்பட்டன. இதனால், இறுதி ஆட்டத்தில் இவர் விளையாடவில்லை. அவருக்குப் பதில் வாஷிங்டன் சுந்தர் அழைக்கப்பட்டார்.
இந்திய அணியில் 8-வது இடத்தை இரண்டு பேர் உறுதி செய்துள்ளார்கள். ஷார்துல் தாக்குர் மற்றும் அக்ஷர் படேல். ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும்படி இருந்தால் இந்திய அணியில் ஷார்துலுக்கு இடம். சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும்படி இருந்தால் அக்ஷர் படேலுக்கு இடம். இருவரும் குறைந்தபட்சம் ஐந்து ஓவர்கள் வீசுவது மட்டுமில்லாமல், பேட்டிங்கிலும் பங்களிப்பைச் செலுத்துவார்கள் என்பதால் இவர்களுக்கு இந்தப் பணி வழங்கப்பட்டிருந்தது.
அக்ஷர் படேல் காயமடைந்துள்ளதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரு ஒருநாள் ஆட்டங்களில் அவர் சேர்க்கப்படவில்லை. இவருக்குப் பதில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டார்கள். மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் அக்ஷர் படேல் சேர்க்கப்பட்டிருந்தாலும்கூட, காயத்தின் தன்மையைப் பொறுத்தே அவர் விளையாடுவது உறுதி செய்யப்படும் என தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்திருந்தார். இதன் காரணமாகவே, மூன்றாவது ஆட்டத்துக்கு உலகக் கோப்பைக்கான இந்திய அணி திரும்பினாலும்கூட அஸ்வினும், வாஷிங்டன் சுந்தரும் அந்த ஆட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
காயத்திலிருந்து குணமடைய ஒவ்வொருக்கு ஒவ்வொரு கால அவகாசம் எடுக்கும் என்பதால், அக்ஷர் படேலின் காயத்துக்குக் காத்திருக்க வேண்டும் என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். ஒருவேளை உலகக் கோப்பைக்கு முன்பு அக்ஷர் படேல் காயத்திலிருந்து குணமடையாவிட்டால் அவருக்குப் பதில் மாற்று வீரர் யார் என்ற கேள்வி இருந்தது.
இதற்கான போட்டி அஸ்வின், வாஷிங்டன் இடையே இருந்தது. ஆசியக் கோப்பை இறுதி ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் விளையாடியிருந்தாலும்கூட, ஆஸ்திரேலியாவுடனான முதலிரு ஒருநாள் ஆட்டங்களில் அஸ்வினுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது.
மொஹாலியில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் 10 ஓவர்கள் வீசிய அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தி 47 ரன்கள் மட்டுமே கொடுத்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் ஆட்டத்தில் களமிறங்கியபோதிலும், அஸ்வின் இந்தப் பந்துவீச்சு சிறப்பானதாகவே கருதப்பட்டது. இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் ஒருபடி மேலே சென்று மூன்று முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
குறிப்பாக கேரம் பந்து மூலம் விக்கெட்டுகளை வீழ்த்தி, தன்னிடமும் வகைகள் இருப்பதை நினைவூட்டினார். அஸ்வினை எதிர்கொள்வதற்காக டேவிட் வார்னர் வலது கை பேட்டராக மாறினார். இதனால் ஆஃப் ஸ்பின் வீசி வந்த அஸ்வின், கேரம் பந்துகளைப் பயன்படுத்தினார். இந்த சுவாரசியமான போட்டி என்றென்றும் நினைவு கூரப்படும்.
அக்ஷர் படேல் காயத்திலிருந்து குணமடையாவிட்டால் 8-வது வரிசைக்கு உறுதியானத் தேர்வாக அஸ்வின் இருப்பார் என்பது தெரிகிறது. ஒருவேளை அக்ஷர் படேல் காயத்திலிருந்து மீண்டு வந்தால், இந்திய அணியில் அஸ்வினுக்கு எப்படி இடம் கொடுக்க முடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அஸ்வினா, வாஷிங்டனா என்றிருந்த குழப்பம் தற்போது அக்ஷரா, அஸ்வினா என்ற இடத்தில் வந்து நிற்கிறது.
ஷ்ரேயஸ் கொடுத்த புதிய தலைவலி:
முதலிரு ஒருநாள் ஆட்டங்களிலிருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹார்திக் பாண்டியா ஆகிய பேட்டர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதால், காயத்திலிருந்து குணமடைந்த ஷ்ரேயஸுக்கு இந்த ஆட்டங்களில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இவரது பேட்டிங் திறன் மற்றும் உடற்தகுதியைக் கவனிப்பதற்காக அனைவரது பார்வையும் இவர் மீதே இருந்தது.
விராட் கோலியின் மூன்றாவது இடத்தில் களமிறக்கப்பட்ட ஷ்ரேயஸ், முதல் ஆட்டத்தில் 3 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். ஷ்ரேயஸுக்கான ஏமாற்றமாக அல்லாமல் இந்திய அணி நிர்வாகத்துக்கே இது பெரிய ஏமாற்றத்தைத் தந்தது.
ஆனால், இரண்டாவது ஒருநாளில் ருதுராஜ் ஆட்டமிழந்தவுடன் வந்த ஷ்ரேயஸ், ஒரு குறிக்கோளுடன் களமிறங்கினார் என்பது அவரது ஷாட்கள் மூலம் தெரியவந்தது. கண் இமைக்கும் நேரத்தில் 17 பந்துகளில் 32 ரன்கள் அடித்து, பேட்டிங்கில் ரன் வேகத்தை அதிகரித்தார். சதம் அடித்த அவர் 90 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார்.
காயத்துக்கு முன்பு நான்காவது இடத்தை ஷ்ரேயஸே ஆக்கிரமித்திருந்ததால், ஆசியக் கோப்பையில் இவரே நான்காம் வரிசையில் களமிறக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், காயத்தால் வெளியேற ராகுலும், இஷான் கிஷனும் இவரது இடத்தைப் பறித்துக்கொண்டார்கள். தற்போது சதம் அடித்ததன் மூலம், தனது இடத்தை உறுதி செய்துள்ளார். பேட்டிங் வரிசையில் ஓர் இடக்கை பேட்டராகக் காணப்பட்ட இஷான் கிஷனுக்கு இனிமேல் நேரடியாக வாய்ப்பு வழங்க முடியாது.
கூடுதல் குழப்பமாக சூர்யகுமார் யாதவ்:
சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிதளவில் சோபிக்காதபோதிலும் அவர் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக இந்திய அணியின் நிர்வாகம் தொடர்ந்து தெரிவித்து வந்தது. உலகக் கோப்பை மிக நீண்ட தொடர் என்பதால், குறிப்பிட்ட சூழல்களில் குறிப்பிட்ட எதிரணிக்கு எதிராக சூர்யகுமார் யாதவைக் களமிறக்கிவிட்டால் ஆட்டத்தின்போக்கையே மாற்றக்கூடிய திறன் படைத்தவர் என வல்லுநர்கள் பலர் தெரிவித்து வந்தார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலி ஒருநாள் ஆட்டத்தில் கேஎல் ராகுலுடன் இணைந்து பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் அரை சதம் அடித்தார். ஸ்வீப் ஷாட் விளையாடாமல் நேராக டிரைவ் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்டார். களத்தில் நேரத்தைச் செலவிட்டார் அரை சதம் அடித்து வெற்றி பெறச் செய்தார். வெற்றி இலக்கை அடையும் வரை ஆட்டமிழக்காமல் இருந்திருக்கலாம் என்பதுதான் குறை.
தொடர்ந்து, இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் அதிரடிக்கான அனைத்து சூழல்களும் சூர்யகுமார் யாதவுக்குச் சாதகமாக இருந்தது. 41-வது ஓவரில் களமிறங்கி 44-வது ஓவர் வரை நேரம் எடுத்துக்கொண்ட சூர்யகுமார் யாதவ், கேம்ரூன் கிரீன் வீசிய ஓவர்களில் தொடர்ந்து 4 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ருத்ரதாண்டவத்தை வெளிப்படுத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 37 பந்துகளில் தலா 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்து இந்திய அணியை 399 ரன்கள் வரை எடுத்துச் சென்றார்.
ஒரு சில ஆட்டங்களில் வெற்றியை எதிரணியிடமிருந்து பறிக்கக்கூடிய வகையிலான இதுமாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாலேயே சூர்யகுமார் அணியில் நீடிக்க வேண்டும் என இவருக்கான ஆதரவுக் குரல் வரத் தொடங்கிவிட்டன. இருந்தாலும், மீண்டும் அதே சிக்கல். விளையாடும் லெவனில் எந்த வீரருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவைச் சேர்ப்பது?
முகமது ஷமியின் ஐந்து விக்கெட்டுகள்:
இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான இடத்தை ஜஸ்பிரித் பும்ராவும், முகமது சிராஜும் நிரப்பியுள்ளார்கள். கூடுதல் உதவியாக ஷார்துல் தாக்குர் மற்றும் ஹார்திக் பாண்டியா இருக்கிறார்கள். இதனால், முகமது ஷமிக்கு விளையாடும் அணியில் இடம் கிடைப்பது சிக்கலாகவே இருந்தது. ஆஸ்திரேலியாவுடனான முதலிரு ஆட்டங்களில் ஹார்திக் பாண்டியா இல்லாததால், ஐந்து பந்துவீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கியது.
முதல் ஆட்டத்தில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக தொடக்க ஓவர்கள், நடு ஓவர்கள், கடைசி ஓவர்கள் என அனைத்துப் பகுதியிலும் விக்கெட் வீழ்த்தியதுதான் சிறப்பம்சமே.
ஷமியை எப்படி வெளியே உட்கார வைக்க முடியும் என்கிற குரல்களுக்கு வலு சேர்த்தார் ஷமி.
இப்படியாக ஆசியக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணிக்கு ஏராளமான நேர்மறையான விஷயங்கள் நிகழ்ந்திருந்தாலும்கூட, இரண்டு வீரர்கள் மீது எதிர்மறை காரணங்களுக்காக மீண்டும் வெளிச்சம் விழுந்துள்ளது.
இஷான் கிஷன் - ஷார்துல் தாக்குர்:
2022-க்குப் பிறகு ஷார்துல் தாக்குர் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும்கூட, ஆஸ்திரேலியாவுடனான இரு ஒருநாள் ஆட்டங்களிலும் ஏமாற்றமளித்திருக்கிறார். ஏற்கெனவே இவரது இடத்தில் ஷமியைக் களமிறக்க வேண்டும், 7 பேட்டர்களால் ரன் அடிக்க முடியவில்லையெனில் 8-வது பேட்டராலும் ரன் அடிக்க முடியாது என விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இந்த விமர்சனங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் ஷார்துலின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. மொஹாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 10 ஓவர்களை வீசிய ஷார்துல் 78 ரன்கள் கொடுத்தார். இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் ஷார்துல் 35 ரன்களைக் கொடுத்தார்.
பும்ரா, சிராஜுடன் ஷமி விளையாடும்போது இந்திய அணியின் பந்துவீச்சு கூடுதல் பலத்துடன் இருப்பதாகக் கருத்துகள் வைக்கப்பட்டதற்கு ஏற்ப நேர்மறையாக ஷமியும், எதிர்மறையாக ஷார்துலும் செயல்பட்டுள்ளதால் அடுத்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியின் மேல் வரிசை பேட்டிங்கில் இடக்கை பேட்டர் இல்லாதது பெரிய குறையாகப் பார்க்கப்பட்டது. குறிப்பாக நடு ஓவர்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும்போது இடக்கை - வலதுகை பேட்டர்கள் கூட்டணி இருந்தால், அதைச் சமாளிக்கவும், பதிலடி கொடுக்கவும் ஏதுவாக இருக்கும் என்பது வாதம். ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் இஷான் கிஷன். இந்த இடத்தை இவர் உறுதி செய்துவிட்டார் என்றே பார்க்கப்பட்டது.
ஆனால், ஷ்ரேயஸ் மற்றும் சூர்யகுமார் யாதவின் எழுச்சியும் கடந்த சில ஆட்டங்களில் கிஷன் பெரிய இன்னிங்ஸை விளையாடாததும் நடுவரிசையில் இஷான் கிஷனின் இடத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக ஆசியக் கோப்பை லீக் ஆட்டத்துக்குப் பிறகு இஷான் கிஷன் அடித்த ரன்கள்:
33 (61) Vs இலங்கை,
5 (15) Vs வங்கதேசம்,
23* (18) Vs இலங்கை,
18 (26) Vs ஆஸ்திரேலியா,
18 (30) Vs ஆஸ்திரேலியா
இப்படியாக இந்திய அணி உலகக் கோப்பைக்கு முன்னதாக நிறைய நேர்மறையான சிக்கல்களைச் சந்தித்துள்ளது. ஆஸ்திரேலியாவுடனான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்துக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் அணிக்குத் திரும்புகிறார்கள். இவர்கள் அணிக்குத் திரும்பும்போது ஷ்ரேயஸுக்கு இடம் கிடைக்குமா, அஸ்வினுக்கு மூன்றாவது ஆட்டத்திலும் வாய்ப்பு வழங்கப்படுமா, வாஷிங்டன் சுந்தருக்கு முதல் வாய்ப்பு வழங்கப்படுமா, சூர்யகுமார் யாதவ் எந்த இடத்தில் விளையாட வைக்கப்படுவார், உலகக் கோப்பைக்கு முன்பு அக்ஷர் படேல் காயத்திலிருந்து குணமடைந்துவிடுவாரா என அடுக்கடுக்கான கேள்விகள் இந்திய அணியின் முன்பு உள்ளது.
இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு பரிசளிப்பு விழாவில் பேசிய கேப்டன் கேஎல் ராகுல், அணித் தேர்வு முடிவுகளெல்லாம் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் தலைவலி என்று சாதுர்யமாகப் பதிலளித்து நழுவியிருக்கிறார்.
ராகுல் டிராவிட்டும், ரோஹித் சர்மாவும் எடுக்கப்போகும் முடிவுகள் என்ன?