செய்திகள்

இடதா, வலதா?: வார்னரைக் குழப்பிய அஸ்வின்!

ரெவ்யூ எடுக்காமலேயே வார்னர் வெளியேற, பந்து பேட்டில் உரசியது பின்னர் தான் தெரியவந்தது.

வார்னர்  •  AFP/Getty Images

வார்னர்  •  AFP/Getty Images

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் அஸ்வினை எதிர்கொள்ள வலதுகை பேட்டராக மாறிய வார்னரின் செயல் சுவாரசியத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் இருவருக்கிடையேயான இந்தப் போட்டியில் இறுதியில் அஸ்வினே வென்றார்.
இந்தூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா 399 ரன்களைக் குவித்தது. கில், ஷ்ரேயஸ் ஐயரின் சதம் மற்றும் சூர்யகுமார் யாதவின் அதிரடி அரை சதம் ஆகியவற்றின் காரணமாக இந்த ஸ்கோர் சாத்தியமானது.
இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே ஷார்ட் மற்றும் ஸ்மித்தின் விக்கெட்டுகளை இழந்தது. மழையும் இடையே சற்று நேரம் விளையாடியது. இதனால் ஆஸி.க்கு 33 ஓவர்களில் 317 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மழைக்குப் பிறகு ஆடுகளம் சுழற்பந்துக்கு நன்றாகவே ஒத்துழைக்க ஆரம்பித்தது.
அஸ்வினை எதிர்கொள்வதற்காக இடக்கை பேட்டரான வார்னர், திடீரென வலதுகை பேட்டராக மாறினார். இதனைக் கண்ட ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் உள்ளிட்ட வீரர்கள் ஓய்வறையிலிருந்து புன்னகையை வெளிப்படுத்தினார்கள். அஸ்வின் வீசிய 13-வது ஓவரில் வலதுகை பேட்டராக விளையாடிய வார்னர் ஸ்வீப் ஷாட்டில் பவுண்டரி அடித்து ஆச்சர்யப்படுத்தினார்.
ஆனால், வார்னரின் இந்த வினோத திட்டம் வெகுநேரத்துக்குப் பலன் கொடுக்கவில்லை. அஸ்வின் வீசிய 15-வது ஓவரின் முதல் பந்தில் வலக்கையில் பேட்டிங் செய்துகொண்டிருந்த வார்னர், இடக்கைக்கு மாறி ஸ்வீப் ஆட முயன்றார். அஸ்வினின் கேரம் பந்து வலையில் விழுந்த வார்னர் பந்தை கால்காப்பில் வாங்க, எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ரெவ்யூ எடுக்காமலேயே வார்னர் வெளியேற, பந்து பேட்டில் உரசியது பின்னர் தான் தெரியவந்தது. கச்சிதமாகப் பந்துவீசிய அஸ்வின் இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தார்.
அஸ்வின் வெர்சஸ் வார்னர் இடையிலான மோதலை கிரிக்கெட் என்பதை விடவும் செஸ் எனலாம். இந்தமுறை செக் மேட் வைத்து வெற்றி பெற்றது அஸ்வின் தான்.
பேட்டிங் நிலையை மாற்றிக்கொள்வது வார்னருக்குப் புதிது அல்ல. முன்னதாக, கடந்த ஐபிஎல் போட்டியில் தில்லி அணிக்காக விளையாடிய வார்னர் மும்பைக்கு எதிரான ஆட்டத்திலும் இதேபோன்று விளையாடினார். இங்கிலாந்தின் ஜோ ரூட், இந்தியாவின் ஹனுமா விகாரி, சுனில் கவாஸ்கர் ஆகியோரும் இந்த வித்தியாச முயற்சியை முன்னர் மேற்கொண்டிருக்கிறார்கள்.