செய்திகள்

தோனிக்காக மட்டுமே..: ரவீந்திர ஜடேஜா நெகிழ்ச்சி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகச் சிறந்தவர்களுள் ஒருவரான எம்எஸ் தோனிக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம் என்றார் ஜடேஜா.

வெற்றிக் களிப்பில் ஜடேஜா  •  AFP/Getty Images

வெற்றிக் களிப்பில் ஜடேஜா  •  AFP/Getty Images

கடந்த ஐபிஎல் பருவத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்பே கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார் எம்எஸ் தோனி. ஜடேஜாவால் எதிர்பார்த்தபடி செயல்பட முடியவில்லை. சென்னை தொடர் தோல்விகளைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து தோனியே போட்டியின் பிற்பகுதியில் மீண்டும் அணியை வழிநடத்தினார்.
இதனால், ரவீந்திர ஜடேஜா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இடையே விரிசல் என பேசப்பட்டது. நடப்பு ஐபிஎல் பருவத்தில் பந்துவீச்சில் அசத்தி வந்த ஜடேஜாவால் தொடக்கத்தில் பேட்டிங்கில் ஜொலிக்க முடியவில்லை. லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தின் முடிவில், தோனி ஜடேஜாவிடம் நீண்ட நேரம் பேசினார். இதைத் தொடர்ந்து, அணியின் தலைமைச் செயல் அதிகாரியான காசி விஸ்வநாதன் களத்திலேயே ஜடேஜாவை சமாதானப்படுத்துவது போன்ற புகைப்படங்கள் பரவ, பழைய 'விரிசல்' செய்திகள் மீண்டும் தூசிதட்டப்பட்டன.
ஆனால், நேற்றைய இறுதி ஆட்டம் எல்லா யூகங்களையும் உடைத்தெறிந்துவிட்டது. வெற்றிக்குக் கடைசி இரு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட, ஜடேஜா சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து சென்னை ஐந்தாவது முறையாகக் கோப்பை வெல்வதில் முக்கியப் பங்காற்றினார்.
வெற்றி மகிழ்ச்சியில் மைதானத்தைச் சுற்றி ஓடிய ஜடேஜாவை, தூக்கி சுமந்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்றில் மிக முக்கியமான புகைப்படமாக அது மாறியது.
வெற்றி குறித்து பேசிய ஜடேஜா, "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகச் சிறந்தவர்களுள் ஒருவரான எம்எஸ் தோனிக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம்" என்றார்.
இதைத் தொடர்ந்து, ஐபிஎல் கோப்பை மற்றும் தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் ஜடேஜா ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில், தோனிக்காக மட்டுமே நாங்கள் இதைச் செய்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தோனிக்காக எதையும் செய்யத் தயார் என்றும் இந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.