செய்திகள்

விராட் கோலியின் வெற்றி ரகசியம் என்ன?: ஹேசில்வுட் விளக்கம்!

இந்திய அணிக்கு எதிராக பிரிஸ்பேன் டெஸ்டில் 2014-ல் அறிமுகமான ஹேசில்வுட், இந்தியாவுக்கு எதிராக இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

கோலியை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஹேசில்வுட்  •  Getty Images

கோலியை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஹேசில்வுட்  •  Getty Images

இந்திய முன்னணி பேட்டர் விராட் கோலியின் வெற்றி ரகசியம் குறித்து ஆஸ்திரேலிய வேகபந்து வீச்சாளர் ஹேசில்வுட் கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் ஜூன் 7-ம் தேதி நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த நிலையில் ஐபில் போட்டியில் ஆர்சிபி அணியில் இணைந்து விளையாடிய ஹேசில்வுட், கோலி உடனான தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
"கோலியின் கடின உழைப்புதான் அவருடைய வெற்றிக்கு முக்கிய காரணம். பயிற்சிக்கு முதல் ஆளாக வரும் அவர் எப்போதும் கடைசி ஆளாகத் தான் வெளியே செல்வார். அவர் உடன் இருந்தாலே சக வீரர்களுக்கும் அந்த உற்சாகம் தொற்றிக் கொள்ளும்." என்றார் ஹேசில்வுட்.
ஆர்சிபி அணியின் சக வீரரான முகமது சிராஜ் குறித்துப் பேசிய ஹேசில்வுட், " சின்னசாமி மைதானத்தில் சிக்கனமாகப் பந்து வீசுவது என்பது சாதரண விஷயம் அல்ல. ஆனாலும் சில நேரங்களில் சிராஜ் ஓவருக்கு 6 அல்லது 6.5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். அவருடைய பந்துவீச்சில் உள்ள கட்டுப்பாடு சிறப்பானது." என்றார்.
டெஸ்ட் போட்டியில் ஹேசில்வுட் இந்திய அணிக்கு எதிராக 5 முறை ஐந்து அல்லது அதற்கும் அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து மண்ணிலும் அவருடைய ரெக்கார்ட் சிறப்பாக உள்ளது: 8 ஆட்டங்களில் 23.58 சராசரியுடன் 36 விக்கெட்டுகள்.
இந்திய அணிக்கு எதிராக பிரிஸ்பேன் டெஸ்டில் 2014-ல் அறிமுகமான ஹேசில்வுட், இந்தியாவுக்கு எதிராக இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்தியா, ஆஸ்திலேய அணிகள் இடையிலான ஆட்டம் இங்கிலாந்தில் நடைபெறுவது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.