யார் இந்த ஆகாஷ் மத்வால்?
வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இருந்த மத்வால், இன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளராக மாறியுள்ளார்.
ESPNcricinfo staff
25-May-2023
விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் மத்வால் • Associated Press
மொத்தம் 21 பந்துகள். அதில் 17 டாட் பந்துகள். விட்டுக்கொடுத்தது 5 ரன்கள். கைப்பற்றியது 5 விக்கெட்டுகள். ஐபிஎல் வரலாற்றில் பிளேஆஃப் சுற்றில் இதுதான் மிகச் சிறப்பான பந்துவீச்சு. இதற்குச் சொந்தக்காரர் ஜஸ்பிரித் பும்ராவோ ககிசோ ரபாடாவோ அல்ல.
ரூ 20 லட்சத்துக்கு மும்பை அணியால் வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் மத்வால். 24-வது வயது வரை சிவப்புப் பந்தில் விளையாடிய அனுபவம் இல்லாத ஒருவர், இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியத் துருப்பாக மாறியிருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற லக்னெளவுக்கு எதிரான எலிமினேட்டரில் மும்பையின் நம்பிக்கை நாயனாக மாறியுள்ளார் ஆகாஷ் மத்வால். ரோஹித் சர்மா வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி மும்பைக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்ட மண்கடை அவர் வீழ்த்தினார்.
10வது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் பதோனி, பூரன் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 15-வது ஓவரில் ஹார்ட் பந்தின் (Hard ball) மூலம் பிஸ்னாய் விக்கெட்டை வீழ்த்திய அவர் 17-வது ஓவரில் அட்டகாசமான யார்க்கர் மூலம் மொஷின் கானை பெவிலியனுக்கு அனுப்பினார். யார் இந்த ஆகாஷ் மத்வால்?
ஆகாஷ் மத்வால், உத்தராகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் பிறந்தவர். ரிஷப் பந்த், இவருடைய அண்டை வீட்டுக்காரர். ரூர்க்கியில் ராணுவப் பொறியியல் சேவையில் (MES) பணியாற்றிய மத்வாலின் தந்தை, ஒரு கோர நிகழ்வில் தன் உயிரைப் பறிகொடுத்தார். அடிப்படையில் ஒரு கட்டுமானப் பொறியாளரான ஆகாஷ் மத்வால், கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வத்தால் வேலையை விட்டுவிட்டுப் பந்தைக் கையில் எடுத்தவர்.
மும்பை கேப்டன் ரோஹித் உடன் மத்வால்•Associated Press
அவதார் சிங் என்பவரிடம் கிரிக்கெட் அடிப்படைகளை மத்வால் கற்றுக்கொண்டார். உத்தராகண்ட் டென்னிஸ் பந்து போட்டிகளில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய மத்வால், 'யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்' என்று பெயர் பெற்றவர். ஆகாஷ் மத்வாலின் வேகத்தையும் ஸ்கிட்டி - ஸ்லிங் (skiddy - sling) ஆக்ஷனும் உத்தராகண்ட் பயிற்சியாளர் வாசிம் ஜாஃபரைக் கவர்ந்தது.
2019-ல் சையத் முஷ்டாக் அலி போட்டியில் மத்வாலைக் களமிறக்கினார் வாசிம் ஜாஃபர். டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் விளையாடிய அனுவபம் உள்ளதால் மத்வாலுக்கு வேகம் ஒரு பிரச்னை இல்லை; ஆனால் லைன், லெங்தில் ஒரு பிடிமானம் இல்லாமல் தாறுமாறாக வீசினார். ஆகாஷ் மத்வாலின் வளர்ச்சியில் உத்தராகாண்ட் பயிற்சியாளரான மணிஷ் ஜாவுக்கு ஒரு பெரிய பங்குண்டு.
வாசிம் ஜாஃபருக்குப் பிறகு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற அவர், வேகத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் ஸ்டம்ப் டு ஸ்டம்ப் லைனில் வீசும்படி மத்வாலுக்கு அறிவுரை கொடுத்தார். தன்னுடைய பலம் என்னவென்பதை உணர்ந்து கொண்ட மத்வால், உத்தராகாண்டின் முன்று வடிவலான கிரிக்கெட் போட்டிகளிலும் நிரந்தர இடம்பிடித்தார். ஆர்சிபி அணி 2019-ல் மத்வாலை வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராகத் தேர்வுசெய்தது.
வாய்ப்புக்காகக் காத்திருந்த மத்வால், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கௌட்(scout) கண்ணில் சிக்கினார். முதலில் வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராக இருந்த அவர், 2022-ல் காயமடைந்த சூர்யகுமார் யாதவுக்கு மாற்று வீரராக மும்பை அணியில் இடம்பிடித்தார்; ஆனால் ஓர் ஆட்டத்தில் கூட ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
பும்ரா, ஜை ரிச்சர்ட்ஸன் போன்றவர்கள் விலகியதாலும் ஆர்ச்சர் சரியான உடற்தகுதியில் இல்லாததாலும் மத்வால் மீது பார்வையைத் திருப்பியது மும்பை அணி. பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமான மத்வாலுக்கு, சரியான தொடக்கம் அமையவில்லை. மூன்று ஓவர்களை வீசிய அவர் 37 ரன்களை விட்டுக்கொடுத்தார்; ஆனால் அடுத்தடுத்த ஆட்டங்களில் சிறப்பாகப் பந்துவீசி ரோஹித் சர்மாவின் தளகர்த்தராக மாறினார்.
"எல்லா வீரர்களும் தான் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் மன உறுதி கொண்டவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள். கடந்த ஆண்டு, உத்தராகாண்ட் வெள்ளை நிறப் பந்து போட்டிகளுக்கான கேப்டனாக மத்வாலை நியமித்தேன். பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவர் சிறப்பாக விளையாடினார்." என்கிறார் மணிஷ் ஜா.
'யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்' மத்வால்•BCCI
'யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்' என்று அறியப்படுகிற மத்வாலிடம், லீக் சுற்றில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா புதிய பந்தைக் கொடுத்தார். ஸ்லிங் (sling) ஆக்ஷன் கொண்டவரான மத்வால், பவர்பிளேவில் பந்தை ஸ்கிட் (skid) செய்து சஹா - கில் இணையைப் பிரித்தார்; 11-வது ஓவரில் அபாயகரமான பேட்டர் மில்லர் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
"பவர்பிளே ஓவர்களில் நான் நன்றாகப் பந்துவீசுவதற்கு ரோஹித் தான் காரணம். வலைப்பயிற்சியில் நான் புதிய பந்தில் பந்துவீசுவதைப் பார்த்த அவர் என் மீது நம்பிக்கை வைத்து பவர்பிளேவில் பந்துவீசுவதற்கு எனக்கு வாய்ப்பளித்தார்." என்கிறார் ஆகாஷ் மத்வால்.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்த அகர்வால், விவ்ராந்த் இருவரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்; வக்கார் - வாசிம் கூட்டணி பெருமைப்படும் அளவுக்கு ஒரு யார்க்கரை வீசி ஹாரி புரூக்கின் லெக் ஸ்டம்பைத் தகர்த்தார்.
"ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகியதும் இறுதிக்கட்ட ஓவர்களில் வீசுவதற்கு ஓர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தேவை என்பதை உணர்ந்தோம். வலைப்பயிற்சியில் மத்வாலின் பந்துவீச்சைப் பார்த்துள்ளதால் அவர் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. திறமையுடன் சேர்த்து தைரியமும் கொண்டவர் அவர். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கௌட் பிரிவுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். கடந்த காலங்களில் மும்பைக்கு விளையாடிய வீரர்கள் நிறைய பேர் இந்திய அணிக்கு முன்னேறியுள்ளார்கள். மத்வாலும் இந்திய அணிக்காக விளையாடுவார்" என்கிறார் ரோஹித் சர்மா.
தான், ஜஸ்பிரீத் பும்ராவுக்கு இணையான பந்துவீச்சாளர் இல்லை என்று கூறும் மத்வால் "பொறியாளர்கள் எந்த ஒன்றையும் எளிதாக கற்றுக்கொள்வார்கள்." என்று விளையாட்டாகக் கூறுகிறார். இந்திய கிரிக்கெட் அணி பொறியாளர்களை எப்போதும் வாரி அணைத்துக்கொள்ளும். எரப்பள்ளி பிரசன்னா, கும்ப்ளே, அஸ்வின் என்று ஒரு பட்டியல் உண்டு. விரைவில் ஆகாஷ் மத்வாலும் அந்த வரிசையை அலங்கரிக்கட்டும்!