இன்று: 'தையல் நாயகன்' கம்மின்ஸ் பிறந்த நாள்!
தனது 18வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான கம்மின்ஸ் தனது மறுவாய்ப்புக்காக ஆறு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாவதற்கு முன்பாகவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் பரீட்சியமான பெயர் பேட் கம்மின்ஸ்! 2011-இல் தனது அறிமுக டெஸ்டிலேயே 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் ஆட்ட நாயகன் விருதையும் கம்மின்ஸ் தட்டிச்சென்றார்.
கம்மின்ஸின் புயல் வேகமும் பேட்டர்களின் மனதை ஊசலாட வைக்கும் ஸ்விங்கும் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்தது. டென்னிஸ் லில்லிக்குப் பிறகு ஒரு முழுமையான வேகப்பந்து வீச்சாளர் ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்திருக்கிறார் என்று இயன் சாப்பல் வரவேற்றார்.
கம்மின்ஸின் பந்துவீச்சு ஆக்சன் பயோ மெக்கானிக்ஸ் (Bio mechanics) வரையறைக்குள் சரியாகப் பொருந்தவில்லை. ஒத்திசைவு இல்லாத ஆக்சன் காரணமாக அவருடைய முதுகுப்பகுதி கடும் அழுத்தத்துக்கு உள்ளானது. தனது 18வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான கம்மின்ஸ் தனது மறுவாய்ப்புக்காக ஆறு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
2017-ல் மறுவருகையை நிகழ்த்திய அவர் பயோ மெக்கானிஸ் அடிப்படையில் தனது ஆக்சனை மாற்றியமைத்து முன்னைக் காட்டிலும் வலுகொண்டவராக மாறியிருந்தார். ஹேசில்வுட் - ஸ்டார்க் ஜோடி அணியில் நிலைபெற்றிருந்த சமயத்தில் தனது தனித்துவத்தைத் தக்கவைப்பதற்காக கம்மின்ஸ் கைகொண்டதுதான் வாபில் ஸீம்!(Wobble Seam)
வாபில் ஸீமை ஒரு பாணியாகத் தொடங்கிவைத்தவர் பாகிஸ்தானின் முகமது ஆஸிப். அவரைப் பார்த்து ஆண்டர்சனும் பிராடும் வாபில் ஸீமை எப்படி வீசுவது என்று கற்றுக்கொண்டனர். இங்கிலாந்தில் சந்தைப்படுத்தப்பட்டதால் அங்குள்ள கவுண்டி அணிகளின் மூலம் 'வாபில் ஸீம்' கம்மின்ஸை வந்தடைந்தது.
காற்றில் ஊசலாடியபடி பயணிக்கும் பந்தின் தையல் ஆடுகளத்தில் எந்தப்பக்கம் விழுகிறதோ அந்தப் பக்கம் பந்து தெறித்து ஓடும். தையல் எந்தப் பக்கம் விழும் என்பது எதிரில் நிற்கும் பேட்டருக்கு மட்டுமல்ல பந்தை வீசுகின்ற பந்துவீச்சாளருக்கும் தெரியாது என்பதுதான் வாபில் ஸீமின் சுவாரஸ்யமே!
உலகின் தலைசிறந்த பேட்டர்களான விராட் கோலி, ஜோ ரூட், பாபர் ஆஸம் போன்றவர்களே கம்மின்ஸின் வாபில் ஸீமுக்குத் திணறுகின்றனர். வேகப்பந்து வீச்சின் தாயகமான ஆஸ்திரேலிய அணியில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டன் பொறுப்பை ஏற்பது என்பது அரிது. ஒரேயொரு ஆட்டத்தில் ரே லிண்ட்வால் கேப்டனாகச் செயல்பட்டார். ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!
Read in App
Elevate your reading experience on ESPNcricinfo App.