செப்டம்பர் 24: டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா!

ESPNcricinfo staff

டி20 உலகக் கோப்பையை வென்ற இளம் படை © Getty Images

2007

தோனி தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்ற இளம் படை!

ஒரு மகத்தான தலைவன் உருவான தருணம் அது. 2007-ல் இந்த நாளில், தோனி தலைமையிலான இளம் இந்தியப் படை, டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் மோத வேண்டும் என்கிற இரு நாட்டு ரசிகர்களின் பல ஆண்டுக் கனவு நிறைவேறிய நாளும் அன்று தான். ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற தோனி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். கம்பீரின் அருமையான 75 ரன்களாலும் ரோஹித்தின் அதிரடியான 30 ரன்களாலும் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. உமர் குல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலக்கை விரட்டும்போது பாகிஸ்தான் தடுமாறினாலும் திடீர் திருப்பமாக மிஸ்பா உல் ஹக், அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். ஒருவழியாகக் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை எனும்போது யாரும் எதிர்பாராதவிதமாக ஜோஹிந்தர் சர்மாவைப் பந்துவீசை அழைத்தார் தோனி. 2-வது பந்தில் மிஸ்பா, ஒரு சிக்ஸர் அடித்து இந்திய ரசிகர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தார். அடுத்தப் பந்தில் ஃபைன் லெக் பகுதியில் ஸ்கூப் ஷாட் அடிக்க முயன்றார் மிஸ்பா. பந்து உயரப் பறந்தது. அது சிக்ஸரா கேட்சா என அனைவரும் பதற்றத்துடன் பார்த்தபோது ஸ்ரீசாந்த் கேட்ச் பிடித்து கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தார். தனது ஷாட் தேர்வை எண்ணி மிஸ்பா நொந்து போனார். அது ஒரு காவியத் தருணம்.

தோனி தலைமையிலான இந்தியா முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு தோனி பல கோப்பைகளை வெல்வதற்கான முதற்புள்ளியாகவும் அமைந்தது.

Comments