நவம்பர் 05 : விராட் கோலி பிறந்தநாள்!

ESPNcricinfo staff

விராட் கோலி © ICC/Getty Images

இந்திய அணியின் பேட்டிங் சக்ரவர்த்தியான விராட் கோலி இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

2008-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. பிறகு 2011-ல் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபோது அதிலும் கோலியின் அபார பங்களிப்பு இருந்தது.

2012 அடிலெய்டில் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். 3 ஆண்டுகளுக்குப் பின் அதே மைதானத்தில் இந்திய அணியின் கேப்டனாகக் களமிறங்கி இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்தார்.

இந்தியாவின் மகத்தான டெஸ்ட் கேப்டனாகப் பாராட்டப்படுபவர் கோலி. 2018-ல் கோலி தலைமையிலான இந்திய அணி முதன் முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர்களின் பட்டியலில் 48 சதங்களுடன் கோலி 2-வது இடத்தில் உள்ளார். சச்சினின் சாதனையை அவர் எப்போது முறியடிப்பார் என கிரிக்கெட் உலகம் காத்துக் கொண்டிருக்கிறது.

சச்சினின் மிகச்சிறந்த ஒருநாள் ஆட்டம்

2009-ல் இதே நாளில் ஹைதராபாதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மறக்க முடியாத ஒருநாள் ஆட்டத்தை விளையாடினார் சச்சின்.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 350 ரன்களைக் குவித்தது. இலக்கை விரட்டியபோது அற்புதமாக பேட்டிங் செய்து பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார் சச்சின்.

141 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 19 பவுண்டரிகளுடன் 175 ரன்கள் குவித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தார். எனினும் சச்சின் ஆட்டமிழந்தபோது, இந்தியா வெற்றிபெற 17 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட்டன. 347 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது. 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றாலும் ஆட்ட நாயகனாக சச்சின் தேர்வு செய்யப்பட்டார்.

இதுவே சச்சினின் மிகச்சிறந்த ஒருநாள் ஆட்டம் என்று பலராலும் போற்றப்படுகிறது.

Comments