நவம்பர் 15: சச்சின், வகார் யூனிஸ் அறிமுகம்

ESPNcricinfo staff

சச்சின் டெண்டுல்கர் © AFP

1989-ல் இதே நாளில் இரு ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்கள். சச்சின் டெண்டுல்கர் மற்றும் வகார் யூனிஸ்.

கராச்சியில் நடைபெற்ற அந்த டெஸ்டில் பங்கேற்றபோது சச்சினின் வயது 16 வருடங்கள் மற்றும் 205 நாள்கள். அப்போது இளம் வயதில் டெஸ்டில் அறிமுகமான 3-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார் சச்சின்.

அந்த டெஸ்டில் சச்சின் 15 ரன்கள் எடுத்து வகார் யூனிஸின் பந்தில் போல்ட் ஆனார். அப்போது யூனிஸின் வயது 17 வருடங்கள் மற்றும் 364 நாள்கள். முதல் இன்னிங்ஸில் யூனிஸ் 19 ஓவர்கள் வீசி 80 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மேலும் சில பெருமைகளைக் கொண்டது இந்த கராச்சி டெஸ்ட். இதில் தனது 100-வது டெஸ்டை விளையாடினார் கபில் தேவ். 100 டெஸ்டுகளில் விளையாடிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்கிற பெருமையையும் கபில் பெற்றார். இதே டெஸ்டில் 5 கேட்சுகள் பிடித்து உலக சாதனையைச் சமன் செய்தார் அசாருதீன்.

பிரவீன் ஆம்ரேவின் அறிமுக சதம்

1992-ல் இதே நாளில் தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டர்பன் டெஸ்டில் அறிமுகமாகி சதமடித்தார் இந்தியாவின் பிரவின் ஆம்ரே.

22 வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்டில் பங்கேற்ற தென்னாப்பிரிக்காவால் அந்த ஆட்டத்தை வெல்ல முடியவில்லை. அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது ஆம்ரேவின் சதம்.

முதல் இன்னிங்ஸில் 254 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது தென்னாப்பிரிக்கா. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் கடைசியில் 277 ரன்கள் எடுத்ததற்கு ஆம்ரேவின் சதம் முக்கியக் காரணமாக அமைந்தது. மழையால் 4-வது நாள் ஆட்டம் நடைபெறாததால் 5-வது நாளில் தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் டிரா ஆனது. ஆட்ட நாயகன் விருது ஆம்ரேவுக்கு வழங்கப்பட்டது.

11 டெஸ்டுகளில் விளையாடிய ஆம்ரே, அதன்பிறகு வேறு எங்கும் சதமடிக்கவில்லை.

Comments