சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த விராட் கோலி!
இந்திய அணியின் நட்சத்திர பேட்டரான விராட் கோலி இன்று கிரிக்கெட்டில் தனது 15-வது ஆண்டை நிறைவு செய்கிறார். 2008-ல் தனது 19-வது வயதில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் கோலி அறிமுகமானார். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அறிமுகமான இளம் தொடக்க பேட்டர் என்ற சாதனையைப் படைத்தார்.
தனது அறிமுக ஆட்டத்தில் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்த கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 20 முறை தொடர் நாயகன் விருதை வென்று சச்சினின் சாதனையைச் சமன் செய்துள்ளார். இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனான கோலி தலைமையில் இந்தியா 40 டெஸ்டுகளை வென்றுள்ளது. கோலி குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களைக் கீழே காணலாம்.
இளம் வயதில் தொடக்க ஆட்டக்கார்!
2008-ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் கோலி அறிமுகமானார். அப்போது அவருடைய வயது 19 வருடங்கள் மற்றும் 287 நாட்கள் ஆகும். அந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக கோலி களமிறங்கினார். இதன்மூலம், அறிமுக ஒருநாள் ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மிக இளம் வயதுகொண்ட இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை. அந்தத் தொடரின் 5 ஆட்டங்களிலும் கோலியே தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கினார். அதன்பிறகு தனது 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 2 முறை மட்டுமே அவர் தொடக்க ஆட்டக்காரராக விளையாடியுள்ளார்.
கோலியைவிட இளம் வயதில் பார்திவ் படேல், யுவராஜ் சிங் மற்றும் வினோத் காம்ப்ளி ஆகிய 3 பேர் மட்டுமே இந்தியாவுக்காக தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளார்கள்.
500 கிலோமீட்டர் ஓட்டம்
சர்வதேச கிரிக்கெட்டில் பவுண்டரி அல்லாமல் 13748 ரன்களை ஓடியே எடுத்துள்ளார் கோலி. இந்த ரன்களுக்காக அவர் ஓடிய தூரம் சுமார் 277 கிலோமீட்டர்களுக்குச் சமம். அதேபோல, அவருடன் பேட்டிங் செய்த வீரர்கள் அடித்த ரன்களுக்காக 233 கிலோமீட்டர்கள் ஓடியுள்ளார். மொத்தமாக, சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்டம்புகளுக்கு இடையே அவர் ஓடிய தூரம் 510 கிலோமீட்டர்கள்!
46 மைதானங்களில் சதம்!
கோலி இதுவரையில் 86 மைதானங்களில் விளையாடியுள்ளார். அவற்றுள் 46 மைதானங்களில் சதம் விளாசியுள்ளார். அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மட்டும் 5 சதங்களை அவர் அடித்துள்ளார். அதிக மைதானங்களில் சதம் அடித்த வீரர்களின் வரிசையில் 53 மைதானங்களில் சதம் அடித்து சச்சின் முதலிடத்திலும் 46 சதங்களுடன் கோலி இரண்டாம் இடத்திலும் உள்ளார்கள்.
உலகக் கோப்பைப் பயணம்!
கோலியின் உலகக் கோப்பைப் பயணமும் சாதனையுடனே ஆரம்பித்தது. 2011 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் விளையாடின. கோலியின் முதல் உலகக் கோப்பை ஆட்டமும் அதுவே. கோலி அதில் சதம் அடித்தார். அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அரை சதம் அடித்தார்.
இதன்மூலம் அறிமுக ஒருநாள் உலகக்கோப்பை ஆட்டத்தில் சதமும் டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் அரை சதமும் அடித்த ஒரே வீரர் எனும் சாதனையைப் படைத்தார். 2014 டி20 உலகக் கோப்பையில் அரை சதமும் 2015 ஒருநாள் உலகக் கோப்பையில் சதமும் அடித்து கோலியின் இந்த சாதனையில் அங்கமாக மாறினார் ஆரோன் ஃபிஞ்ச்.
10 இன்னிங்ஸ்களில் 1000 ரன்கள்!
2018-ல் பிப்ரவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 10 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 142.14 சராசரியுடன் 995 ரன்களைக் குவித்தார் கோலி. இதில் 5 சதங்களும் 3 அரை சதங்களும் அடங்கும். இதன் மூலம் தொடர்ச்சியாக 10 ஒருநாள் இன்னிங்ஸ்களில் விளையாடி அதிக ரன்கள் குவித்த வீரர் எனும் வார்னரின் சாதனையை முறியடித்தார் கோலி. 2016 அக்டோபர் முதல் 2017 ஜூன் வரையிலான காலகட்டத்தில் வார்னர் 857 ரன்களைக் குவித்திருந்தார்.