செப்டம்பர் 18: டேரன் காஃப் பிறந்தநாள்!
1970
டேரன் காஃப் பிறந்தநாள்!
1990-களில் இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருந்த டேரன் காஃப் பிறந்த தினம் இன்று.
1994-ல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான டேரன் காஃப், அறிமுக இன்னிங்ஸில் அரை சதம் அடித்தார். முதல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.
அதிக உயரம் என்கிற வேகப்பந்து வீச்சாளர்களுக்கான பலத்தைக் கொண்டிராததால் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டு - ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் குறைவேகப் பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்தினார் டேரன் காஃப். 1999 சிட்னி ஆஷஸ் டெஸ்டில் ஹாட்ரிக் எடுத்தார்.
2000, 2000-01-ல் இங்கிலாந்து தொடர்ச்சியாக நான்கு தொடர்களை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை தொடர்களில் தொடர் நாயகன் விருதுகளை வென்றார்.
முழங்கால் காயம் காரணமாக 2003-க்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார். 2008-ல் ஓய்வு பெற்றார். 58 டெஸ்டுகளில் 229 விக்கெட்டுகளையும் 159 ஒருநாளில் 234 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
*
பந்துவீச்சில் கலக்கிய சௌரவ் கங்குலி!
1997-ல் இதே நாளில் பந்துவீச்சில் கங்குலி அசத்துவதைக் காணும் வாய்ப்பு கனடா நாட்டு ரசிகர்களுக்குக் கிடைத்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார் கங்குலி.
ஆனால், பந்துவீச்சில் 10 ஓவர்களில் 3 மெய்டன்களை வீசி 16 ரன்கள் மட்டுமே கொடுத்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியா 3-0 என முன்னிலை பெற்றது.
இந்தியாவின் வெற்றிக்குப் பந்துவீச்சில் உதவிய கங்குலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.