அயர்லாந்துடனான முதல் ஒருநாளில் ஜோ ரூட்!
அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்துக்கான இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் சேர்க்கப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள ஜோ ரூட், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சோபிக்கவில்லை. முதல் மூன்று ஒருநாள் ஆட்டங்களில் 6, 0 மற்றும் 4 ரன்களையே எடுத்தார். நான்காவது ஒருநாள் ஆட்டத்தில் 40 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம், ஜோ ரூட் தாமாக முன்வந்து கேட்டுக்கொண்டதற்கு இணங்க அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு 16 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே ரூட் விளையாடியுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான தொடருக்கு ஆரம்பத்தில் 13 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது. உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த 15 பேரில் ஒருவர்கூட அயர்லாந்து தொடரில் சேர்க்கப்படாமல் இருந்தார்.
ஹாரி புரூக் அயர்லாந்து தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட உலகக் கோப்பைக்கான இறுதிசெய்யப்பட்ட அணியில் ஜேசன் ராய்-க்குப் பதில் ஹாரி புரூக் சேர்க்கப்பட்டார். இதன்மூலம், அயர்லாந்து தொடரிலிருந்து அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி செப்டம்பர் 27-ம் தேதி இந்தியாவுக்குப் புறப்படுகிறது. எனவே, அயர்லாந்து தொடருக்கு ஸாக் கிராலே தலைமையிலான இரண்டாம் நிலை இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.