செப்டம்பர் 20: ரஷித் கான் பிறந்தநாள்!
டி20 கிரிக்கெட்டில் உலகின் மிகச்சிறந்த லெக் ஸ்பின்னராகக் கொண்டாடப்படும் ரஷித் கானின் பிறந்த தினம் இன்று.
17 வயதில் ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமான ரஷித் கான், குறுகிய காலத்திலேயே உலக கிரிக்கெட்டில் தனது பெயரை அழுத்தமாகப் பதித்துவிட்டார். 19 வயதில் ஆப்கானிஸ்தான் அணியின் ஒருநாள் கேப்டனாகவும் 20 வயதில் டெஸ்ட் கேப்டனாகவும் செயல்பட்டார் ரஷித் கான். இவ்விரண்டுமே உலக சாதனைகள் தான். அதிக ஒருநாள் விக்கெட்டுகள் எடுத்த ஆப்கானிஸ்தான் வீரராகவும் உள்ளார்.
19 வயதில் ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த ரஷித் கான், அதே வருடத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்கிற சாதனையையும் படைத்தார்.
ரஷித் கான் இதுவரை 5 டெஸ்டுகள், 94 ஒருநாள் மற்றும் 82 டி20 ஆட்டங்களில் விளையாடி 336 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவை தவிர ஐபிஎல், பிபிஎல், சிபிஎல் என உலகமெங்கும் நடைபெறும் லீக் போட்டிகளில் கொடிகட்டிப் பறக்கிறார்.
** இஜாஸ் அஹமத் பிறந்தநாள்!
பாகிஸ்தானின் முன்னாள் நடுவரிசை பேட்டரான இஜாஸ் அஹமத் இன்று தனது 55-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
சந்தர்பால், ஸ்மித் போல வித்தியாசமான முறையில் பேட்டிங் ஸ்டான்ஸைக் கொண்டிருந்தார் இஜாஸ் அஹமது. அவர் எடுத்த 12 டெஸ்ட் சதங்களில் 6 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்தவை. 1999 ஆசியக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றில் வங்கதேசத்துக்கு எதிராக 211 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார். இவருடைய 10 ஒருநாள் சதங்களும் 100-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் எடுக்கப்பட்டவை.
மிகச் சிறந்த ஃபீல்டரான இஜாஸ், 1992 உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்தார். பாகிஸ்தானுக்காக 60 டெஸ்டுகளில் 3315 ரன்களும் 250 ஒருநாள் ஆட்டங்களில் 6564 ரன்களையும் குவித்துள்ளார்.
**
ஒருநாள் போட்டியின் முதல் ஹாட்ரிக்!
1982-ல் இதே நாளில் தான் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. ஹைதராபாதில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தில் பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் ஜலாலுதீன் தன்னுடைய 7-வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் ராட் மார்ஷ், புரூஸ் யார்ட்லி மற்றும் ஜெஃப் லாசன் ஆகிய மூவரையும் ஆட்டமிழக்கச் செய்து ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
ஒருநாள் போட்டியில் முதல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ஜலாலுதீன், 8 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார்.