செப்டம்பர் 21: கர்ட்லி ஆம்ப்ரோஸ் பிறந்தநாள்!

ESPNcricinfo staff

கர்ட்லி ஆம்ப்ரோஸ் © Getty Images

உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான கர்ட்லி ஆம்ப்ரோஸ் பிறந்த தினம் இன்று.

6 அடி 7 அங்குல உயரமும் ஆக்ரோஷமான பந்துவீச்சுப் பாணியையும் கொண்டவர் மேற்கிந்தியத் தீவுகள் வேகப்பந்துவீச்சாளரான ஆம்ப்ரோஸ். 90-களில் பல பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். 1993 பெர்த் டெஸ்டில் ஆஸி.க்கு எதிராக ஆம்ப்ரோஸ் ஒரு ரன் மட்டும் கொடுத்து 7 விக்கெட்டுகளைச் சாய்த்ததை யாரால் மறக்க முடியும்?

1994 டிரினாட் டெஸ்டில் இவருடைய 6 விக்கெட்டுகளால் இங்கிலாந்து 46 ரன்களுக்குச் சுருண்டு தோல்வியடைந்தது. அந்த ஆட்டத்தில் ஸ்டம்புகளை ஆம்ப்ரோஸ் பறக்கச் செய்தது கண்கொள்ளாக் காட்சி.

கண்ணிமைக்கும் நேரத்தில் புயல் வேகப் பந்துவீச்சால் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய ஆம்ப்ரோஸ், முதல்தர கிரிக்கெட்டில் 941 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

98 டெஸ்டுகளில் 405 விக்கெட்டுகளையும் 176 ஒருநாள் ஆட்டங்களில் 225 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மகத்தான ஆம்ப்ரோஸ் 2000-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான தொடருடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

கிறிஸ் கெயில் பிறந்தநாள்!

மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி பேட்டர் கிறிஸ் கெயில் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

டெஸ்ட், ஒருநாள் அல்லது டி20 என எதுவாக இருந்தாலும் கிறிஸ் கெயிலின் தாரக மந்திரம் அதிரடி ஆட்டம் தான். டெஸ்டுகளில் இரு முச்சதங்களை விளாசிய கெயில், சர்வதேச டி20 ஆட்டங்களில் முதல் சதத்தை அடித்தார். ஒருநாள் ஆட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களைக் குவித்த இவர் 167 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்டில் 15 சதங்களும் ஒருநாளில் 25 சதங்களும் சர்வதேச டி20யில் 2 சதங்களும் அடித்துள்ளார். 2015 ஒருநாள் உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக இரட்டைச் சதம் விளாசினார் கெயில்.

அனைத்து விதமான டி20 ஆட்டங்களிலும் 10 ஆயிரம் ரன்களைக் குவித்த முதல் வீரர் கெயில் தான். 2013 ஐபிஎல் போட்டியில் புனேவுக்கு எதிராக 66 பந்துகளில் 175 ரன்கள் குவித்தது இன்று வரை சாதனையாகத் தொடர்கிறது. டி20 கிரிக்கெட்டில் முடிசூடா மன்னனாக இன்றும் திகழ்கிறார் கெயில்.

Comments