செப்டம்பர் 26: இயன் சேப்பல், ஜானி பேர்ஸ்டோ பிறந்தநாள்!
1943
இயன் சேப்பல் பிறந்தநாள்!
ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான இயன் சேப்பலின் பிறந்தநாள் இன்று. 1943-ல் அடிலெய்டில் கிரிக்கெட் பாரம்பரியமிக்கக் குடும்பத்தில் பிறந்த இயன் சேப்பல், களத்தில் ஆக்ரோஷத்திற்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர். இவருடைய தாய் வழி தாத்தா விக் ரிச்சர்ட்சன் ஆஸ்திரேலிய அணிக்குத் தலைமை தாங்கியவர்.
புல், ஹூக் ஷாட்களை விளையாடுவதில் வல்லவரான இயன் சேப்பல், சுழற்பந்து வீச்சைத் திறம்பட எதிர்கொண்ட ஆஸ்திரேலியர்களில் ஒருவர். கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஆஃப் ஸ்பின்னர் எரப்பள்ளி பிரசன்னாவின் மதிப்பை வென்றெடுத்த ஒரே மேற்கத்திய பேட்டர். 75 டெஸ்டுகளில் விளையாடிய இயன் சேப்பல், 14 சதங்கள் உடன் 5345 ரன்கள் எடுத்தார்.
1964-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான இயன் சேப்பல், கிரிக்கெட் உலகின் அபாரமான ஸ்லிப் ஃபீல்டராகத் திகழ்ந்தார். ஒரு டெஸ்ட் தொடரைக் கூட இழக்காத ஆஸ்திரேலிய கேப்டன் என்ற சிறப்பைப் பெற்றவர். 'ரௌடி' என்று அழைக்கப்பட்ட இயன் சேப்பல், ஊதிய உயர்வுக் கோரிக்கையை வலியுறுத்தி அன்றைய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் பிராட்மேனையே எதிர்த்தார்.
பிராட்மேன் தலைமையிலான கூட்டத்துக்குக் கையில் பியர் போத்தல், சிகரெட் சகிதம் கலந்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.1975, 1976 ஆஷஸ் தொடர்களை இயன் சேப்பல் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வென்றது. கெர்ரி பேக்கரின் வேர்ல்ட் சீரிஸ் கிரிக்கெட்டின் முக்கிய முகங்களில் ஒருவராக அறியப்பட்டார். இயன் சேப்பலின் சகோதரர்கள் கிரேக், டிரெவர் ஆகியோரும் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடினார்கள்.
ஒரே வயிற்றில் பிறந்தவர்கள் என்ற போதும் பேட்டிங் பாணியில் கிரேக்கும் இயனும் எதிரெதிர் துருவங்கள். 1980-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற இயன் சேப்பல், 45 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் வர்ணனையாளராகத் திகழ்கிறார். இவருடைய கிரிக்கெட் பத்தி எழுத்துக்கு உலகம் முழுக்க வாசகர்கள் உண்டு.
1989
ஜானி பேர்ஸ்டோ பிறந்தநாள்!
இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஜானி பேர்ஸ்டோ, இன்று தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். யார்க்ஷைரில் கிரிக்கெட் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்த இவர், தற்போதைய இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணியின் முக்கிய முகங்களில் ஒருவர். இவருடைய தந்தை டேவிட் பேர்ஸ்டோ, இங்கிலாந்து அணிக்காக விளையாடியவர்.
தனது 8-வது வயதில் தந்தையைப் பறிகொடுத்த பேர்ஸ்டோ, 2007-ல் சிறந்த பள்ளி கிரிக்கெட் வீரருக்கான விஸ்டன் விருதை வென்றார். தந்தையைப் போலவே விக்கெட் கீப்பிங்கின் மீது விருப்பம் கொண்ட இவர், 2009-ல் பாரம்பரியமிக்க யார்க்ஷர் கவுன்டி அணியில் விக்கெட் கீப்பர் பேட்டராக அறிமுகமானார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிக் கவனம் ஈர்த்த பேர்ஸ்டோ, 2011-ல் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமானார். 21 பந்துகளில் 41 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்குப் பங்களித்தார். யார்க்ஷைர் வார்ப்பு என்றாலும் பேட்டிங்கிலும் விக்கெட் கீப்பிங்கிலும் தனக்கென்று ஒரு பாணியை பேர்ஸ்டோ வரித்துக்கொண்டார்.
கிரஹாம் கூச் போல பேட்டிங் ஸ்டான்ஸ் கொண்ட பேர்ஸ்டோ, 2016-ல் டெஸ்டில் 1470 ரன்கள் குவித்தார். ஓர் ஆண்டில் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் - பேட்டர் என்ற சாதனையைப் படைத்தார். 2015 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு மார்கன் தலைமையில் புதிதாகக் கட்டமைக்கப்பட்ட இங்கிலாந்து அணியின் முக்கிய வீரராகத் திகழ்கிறார்.
2018-ல் ஒருநாள் கிரிக்கெட்டில் 4 சதங்கள் அடித்த பேர்ஸ்டோ, 2019 உலகக் கோப்பையில் 532 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி முதல்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையைக் கைப்பற்றுவதில் முக்கியப் பங்காற்றினார். மெக்கல்லம் - ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் அணியின் முக்கியத் தளபதியான இவர், 2022-ல் தொடர்ச்சியாக மூன்று டெஸ்டுகளில் 4 சதங்கள் அடித்து அசத்தினார்.
பஞ்சாப் கிங்ஸ், ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடிய பேர்ஸ்டோ, ஐபிஎல் ரசிகர்களின் மனம்கவர்ந்த அயல்நாட்டு தொடக்க பேட்டர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.