செப்டம்பர் 27: எல். பாலாஜி பிறந்தநாள்!

ESPNcricinfo staff

எல். பாலாஜி © K Sivaraman

சுழற்பந்து வீச்சாளர்கள் நிரம்பியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட்டில் இந்திய அளவில் முத்திரை பதித்த வேகப்பந்து வீச்சாளர் எல். பாலாஜி.

2002 முதல் 2012 வரை இந்திய அணிக்காக 8 டெஸ்டுகள், 30 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடினார் பாலாஜி. மூன்று ரஞ்சிப் பருவங்களில் தமிழக அணியின் கேப்டனாக இருந்துள்ளார். பாலாஜி தலைமையில் தமிழக அணி 2011-12-ல் ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

2004 பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை பாலாஜியால் மறக்கவே முடியாது. அவருடைய அவுட்ஸ்விங் பந்துவீச்சுக்கும் அவருடைய சிரித்த முகத்துக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அன்றைய பாகிஸ்தான் அதிபர் முஷாராஃபும் மயங்கினார்கள். ராவல்பிண்டி டெஸ்டில் சோயிப் அக்தர் பந்தில் பாலாஜி சிக்ஸர் அடித்ததும் மற்றொரு அற்புதமான தருணம். 2005-க்குப் பிறகு காயம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் ஒதுங்க வேண்டியிருந்தது. இதனால் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்புகளும் அவருக்குக் குறைந்து போயின.

2016-ல் 34 வயதில் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற பாலாஜி, தற்போது முன்னணி பந்துவீச்சுப் பயிற்சியாளராக உள்ளார்.

*

பிரெண்டன் மெக்கல்லம் பிறந்தநாள்!

நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் பிறந்தநாள் இன்று. 1981-ல் ஒட்டாகோ மாகாணத்தின் டுனெடினில் பிறந்த இவர், நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் என்று வர்ணிக்கப்படுகிறார். விக்கெட் கீப்பர் பேட்டரான மெக்கல்லம், ஐபிஎல் முதல் ஆட்டத்தில் 73 பந்துகளில் 158 ரன்கள் குவித்து கிரிக்கெட் உலகின் பார்வையை ஐபிஎல் போட்டியின் பக்கம் திருப்பியவர்.

அதிரடி பேட்டரான மெக்கல்லம், 2002-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். தொடக்கக் காலத்தில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டுமே சோபித்த இவர், 2010-ல் விக்கெட் கீப்பிங்கை விட்ட பிறகு டெஸ்டிலும் முத்திரை பதித்தார். ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் தொடக்க பேட்டராகக் களமிறங்கி எதிரணியின் பந்துவீச்சை சிதறடித்தார். 101 டெஸ்டுகளில் விளையாடிய மெக்கல்லம், 12 சதங்கள் 31 அரை சதங்கள் உடன் 6,453 ரன்கள் எடுத்தார்.

ஸ்கூப், ரேம்ப் போன்ற அபாயகரமான கிரிக்கெட் ஷாட்டுகளை மன உறுதியுடன் மெக்கல்லம் விளையாடினார். நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலையெழுத்தை மாற்றிய கேப்டன்களில் ஃபிளமிங்கிற்கு அடுத்தபடியாக முக்கியமானவர் மெக்கல்லம். ஆஸ்திரேலிய அணியைப் பின்பற்றிய நியூசிலாந்தின் அணுகுமுறையை மாற்றிக்காட்டினார். எந்தவொரு அணியின் பாணியும் வேண்டாம் என முடிவெடுத்து அன்றைய பயிற்சியாளர் மைக் ஹெஸன் உடன் இணைந்து புதுப் பாணியை உருவாக்கினார்.

இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற மனநிலையில் ஆக்ரோஷமாக ஆட வேண்டும், ஆனால் இயல்புக்கு மீறிய வீண் ஆவேசத்தைத் தூக்கி எறிய வேண்டும். இதுதான் மெக்கல்லமின் பாணி. 2015 உலகக் கோப்பையில் பிரெண்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து அணி உலகக் கோப்பை இறுதிச் சுற்று வரை முன்னேறியது. 2016-ல் ஓய்வை அறிவித்த இவர் ஒரு வலிமையான நியூசிலாந்து அணியை வளர்த்தெடுத்து அதை வில்லியம்சன் வசம் ஒப்படைத்தார்.

ஐபிஎல்-லில் சிஎஸ்கே, ஆர்சிபி, குஜராத், லயன்ஸ், கேகேஆர் ஆகிய அணிகளுக்காக மெக்கல்லம் விளையாடினார். கேகேஆர் அணியின் பயிற்சியாளராக இருந்த இவர் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக உள்ளார். ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு மெக்கல்லம் வகுத்துக் கொடுத்த ஆக்ரோசமான ஆட்டப் பாணி 'பாஸ்பால்' என்றழைக்கப்படுகிறது.

*

டங்கன் ஃபிளட்சர் பிறந்தநாள்!

இங்கிலாந்தின் தலைசிறந்த பயிற்சியாளர்களில் ஒருவரான டங்கன் ஃபிளட்சரின் பிறந்தநாள் இன்று. ஜிம்பாப்வே முன்னாள் பேட்டரான இவர் பேட்டிங் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர் என்று புகழப்பட்டவர். திறமையான ஆல்ரவுண்டர் என்ற பெயரெடுத்த இவர், முதல் தர கிரிக்கெட்டில் 4095 ரன்களும் 215 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்.

டங்கன் ஃபிளட்சர், 2011-ல் இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளாராகப் பொறுப்பேற்றார். இவருடைய வழிகாட்டுதலில் இந்திய அணி, 2015 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதி வரைக்கும் முன்னேறியது. பேட்டிங்கில் ஃபார்வர்ட் பிரெஸ் (Forward press) என்ற தொழில்நுட்பத்தை வளர்த்தெடுத்தவர் என்ற பெருமைக்கு உரியவர்.

Comments