செப்டம்பர் 28: ஆசியக் கோப்பை சாம்பியன் - இந்தியா

ESPNcricinfo staff

ஆசியக் கோப்பையுடன் இந்திய அணி © Associated Press

2018-ல் இதே நாளில் தான் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி 7-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது. துபாயில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தது. லிட்டன் தாஸ் சதம் அடித்தாலும் குல்தீப் யாதவ் மற்றும் கேதார் ஜாதவின் சுழலில் சிக்கிய வங்கதேசம் 222 ரன்களில் ஆட்டமிழந்தது.

ரோஹித் சர்மா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. பொறுமையுடன் விளையாடிய தோனியும் விக்கெட்டைப் பறிகொடுக்க, ஆட்டம் வங்கதேசம் பக்கம் சாய்ந்தது. போதாத குறைக்கு பேட்டிங் செய்துகொண்டிருந்த கேதர் ஜாதவும் காயம் காரணமாக ஓய்வறைக்குத் திரும்பினார்.

இருப்பினும், 48-வது ஓவரில் ஆபத்பாந்தவனாக மீண்டும் உள்ளே வந்தார் ஜாதவ். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்டபோது குல்தீப் யாதவ் 3 ரன்கள் எடுத்து உதவினார். கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான சூழ்நிலையில் பேட்டிங் பொறுப்பு ஜாதவிடம் வந்தது.

மஹ்மதுல்லா விசிய அந்தப் பந்து கால்காப்பில் பட்டாலும் ஒரு ரன்னை ஓடி இந்தியாவுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்கள் ஜாதவும் குல்தீப்பும். இதன்மூலம் 7-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது இந்தியா.

*

மஜித் கான் பிறந்தநாள்!

பாகிஸ்தானின் முன்னாள் ஆல்ரவுண்டரான மஜித் கான் இன்று தனது 77-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

பந்துவீச்சாளராக அணிக்குள் இடம்பிடித்த மஜித் கான் பின்னாளில் அதிரடி பேட்டராகவும் மாறினார். 1976 கராச்சி டெஸ்டில் நியூசிலாந்துக்கு எதிராக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மஜித் கான், அதிரடியாக விளையாடி உணவு இடைவேளைக்கு முன்பாகவே சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்தச் சாதனையை நிகழ்த்திய 4-வது வீரர், மஜித் கான்.

மஜித்தின் தந்தை ஜஹாங்கீர் கான் இந்தியாவுக்காக விளையாடியவர். பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் இவரது உறவினர். பின்னாளில் இம்ரான் கான் இவரை அணியிலிருந்து நீக்க, இருவருக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

முதல் தர கிரிக்கெட்டில் 27 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களைக் குவித்த மஜித் கான், பாகிஸ்தானுக்காக 63 டெஸ்ட் மற்றும் 23 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்றார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு ஆட்ட நடுவராகவும் பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் மஜித் கான் பணியாற்றினார்.

Comments