உலகக் கோப்பையில் பாகிஸ்தான்: பலம் சேர்க்குமா நசீம் ஷா இல்லாத பந்துவீச்சு?
பாபர் ஆஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆசியக் கோப்பைக்கு முன்பு ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது. ஆசியக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றுடன் வெளியேற, ஆசியக் கோப்பையையும், ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரையும் இந்தியா வெல்ல, தரவரிசையில் முதலிடத்தை இழந்தது.
உலகக் கோப்பைக்கான அணியிலிருந்து முக்கியப் பந்துவீச்சாளர் நசீம் ஷா காயம் காரணமாக வெளியேறினார். பயிற்சி ஆட்டங்களில் நியூசிலாந்திடமும், ஆஸ்திரேலியாவிடமும் தோல்வியடைந்தது.
இப்படியாகத் தொடர் பின்னடைவுகளுடன் உலகக் கோப்பையில் களமிறங்குகிறது பாகிஸ்தான். அணிப் பட்டியலைப் பார்க்கும்போது மிக பயங்கரமான அணியைப்போலத் தோற்றமளிக்காது. இருந்தபோதிலும், இந்த உலகக் கோப்பையில் மிக முக்கியமான அணியாக வலம் வரவிருக்கிறது.
பாகிஸ்தான் அணியின் கடந்த கால வெற்றிக்குப் பெரிய பலமாக பந்துவீச்சைப் பார்க்கலாம். முதல் 10 ஓவர்களில் ஷாஹீன் அஃப்ரிடியும், நசீம் ஷாவும் விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள். இவர்களைத் தொடர்ந்து, ஹாரிஸ் ராஃப் வேகத்தில் மிரட்டி விக்கெட்டுகளை வீழ்த்துவது வழக்கமாக இருந்துள்ளது.
ஆனால், உலகக் கோப்பையில் பந்துவீச்சில்தான் பலம் குறைவாகத் தெரிகிறது பாகிஸ்தான்.
உலகக் கோப்பையில் நசீம் ஷா இல்லாமல் களமிறங்குகிறார் அஃப்ரிடி. அட்டகாசமான லெங்த்தில் வீசி திணறடிப்பது மட்டுமில்லாமல், நடு ஓவர்களிலும், கடைசி ஓவர்களிலும் திறம்பட செயல்படக் கூடியவர் நசீம் ஷா. இவரது இடத்தை ஹசன் அலி நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும், நடு ஓவர்களில் விக்கெட்டுகள் வீழ்த்துவதற்கான கூடுதல் பொறுப்பு அஃபிரிடயிடம் இறங்கியுள்ளது.
ஒருவேளை அஃப்ரிடியால் முதல் 10 ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல்போனால், நடுஓவர்களில் விக்கெட்டுகள் வீழ்த்த பாகிஸ்தான் திணறுகிறது. ஆசியக் கோப்பையில் 3 ஆட்டங்களில் விளையாடிய முகமது நவாஸ் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.
2023-ல் ஷதாப் கான்:
ஆட்டங்கள் - 11; விக்கெட்டுகள் - 13; பந்துவீச்சு சராசரி - 39.07
பிரதான சுழற்பந்துவீச்சாளர்களின் திணறலால், அணி நிர்வாகம் கூடுதல் சுழற்பந்துவீச்சாளராக உசாமா மிர்ரை அழைத்து வந்துள்ளது. இவரும் இரு பயிற்சி ஆட்டங்களில் மொத்தம் 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழத்தி நம்பிக்கையளித்துள்ளார். அதே சமயம், முகமது நவாஸ் ஆஸ்திரேலியாவுடனான பயிற்சி ஆட்டத்தில் அரை சதம் அடித்து பேட்டிங்கில் ஆறுதல் அளித்துள்ளார்.
அஃப்ரிடி தொடக்க ஓவர்களில் விக்கெட் வீழ்த்தும்போது, மறுமுனையில் ஹசன் அலியோ, முகமது வாசிமோ ரன்களைக் கொடுக்காமல் நெருக்கடிகளை உண்டாக்க வேண்டும். நடு ஓவர்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும்.
பேட்டிங்கில் கேப்டன் பாபர் ஆஸமைச் சுற்றியே அணி சுழலுகிறது. பாகிஸ்தானுக்காக அவர் தொடர்ந்து ரன்கள் குவித்து வருகிறார். இவர் களமிறங்கும் மூன்றாவது வரிசையில் எந்தக் குழப்பமும் இல்லை.
கடந்த சில போட்டிகளில் தொடக்க ஃபகார் ஸமான் திணறி வந்தாலும்கூட, தனி நபராக ஆட்டத்தை மாற்றக்கூடிய ஒரு இன்னிங்ஸை விளையாடக் கூடியவர். ஹைதராபாத், பெங்களூரு, ஈடன் கார்டன்ஸ் என பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்கள் இவருக்கு உதவலாம். நடுவரிசையில் முகமது ரிஸ்வான் மற்றும் இஃப்திகார் அஹமது நம்பிக்கையளிக்கிறார்கள். சுழற்பந்துவீச்சாளர்கள் திணறும் நேரத்தில் இஃப்திகார் அஹமது பந்தைச் சுழற்றுவது கூடுதல் பலம். இதற்கு வலு சேர்க்கும் விதமாக சௌத் ஷகீல் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 53 பந்துகளில் 75 ரன்களை தடாலடி பேட்டிங் மூலமாக அல்லாமல் அழகான கிரிக்கெட் ஷாட்கள் மூலம் எடுத்தது கவனத்தை ஈர்த்துள்ளது. நடுஓவர்களில் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள இடக்கை பேட்டராக இருப்பது கூடுதல் அம்சம். விக்கெட்டுகளைப் பாதுகாத்து விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டால், இவரை முன்கூட்டியே களமிறக்கிவிட்டு, இஃப்திகார் அஹமதுவை பின்வரிசை அதிரடிக்கு வைத்துக்கொள்ளலாம். இந்த உலகக் கோப்பை பேட்டிங்கில் பாகிஸ்தானின் முக்கியமான பேட்டராக இவர் ஜொலிக்க வாய்ப்பு உள்ளது.
பந்துவீச்சு குறைகளை மட்டும் சரிசெய்துவிட்டால், பாகிஸ்தான் நிச்சயம் பெரிய பாதிப்புகளை உண்டாக்கும். உலகக் கோப்பை போன்ற போட்டிகளில் சாதிக்கக் கூடிய அணி என்பதால் கடந்த காலங்களை ஒதுக்கி வைத்துவிட்டு உத்வேகம் கொள்ளக்கூடிய அணியாக பாகிஸ்தான் வலம் வரும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.