5-வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் நெதர்லாந்து!
நெதர்லாந்து அணி 1996-ல் முதல்முறையாக உலகக் கோப்பையில் விளையாடியது. இதன்பிறகு, 5-வது முறையாக 2023 உலகக் கோப்பையில் விளையாடுகிறது. இதுவரை ஐந்து உலகக் கோப்பைகளில் விளையாடியிருந்தாலும்கூட நெதர்லாந்து மொத்தமாக இரு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.
நெதர்லாந்து உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற கதையே மிகவும் சுவாரசியமானது.
உலகக் கோப்பை தகுதிச் சுற்று சூப்பர் 6-ல் மேற்கிந்தியத் தீவுகள் 374 ரன்கள் குவிக்க, இலக்கை விரட்டிய நெதர்லாந்தும் 374 ரன்கள் குவித்தது. பிறகு சூப்பர் ஓவரில் வெற்றி கண்டது.
கடைசி ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை எதிர்கொண்ட நெதர்லாந்து 274 ரன்கள் எடுக்க வேண்டும். 44 அல்லது அதற்குக் குறைவான ஓவர்களில் எடுத்தால் நெட் ரன் ரேட் அடிப்படையில் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான கடைசி இடத்தைப் பிடிக்க வாய்ப்பு இருந்தது. 42.5 ஓவர்களில் இலக்கை அடைந்து உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது.
தோல்விகள் கொடுக்கும் ஏமாற்றத்தைவிட, வெற்றிகள் கொடுக்கும் உத்வேகமே அதிகம் என்பதுதான் நெதர்லாந்தின் பலம். சுருக்கச் சொன்னால், அவர்களுக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை.
உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஸ்காட்லாந்துக்கு எதிரான வெற்றிக்கு மிக முக்கியமானவர் பாஸ் டி லீட். இந்த ஆட்டத்தில் இவர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியது மட்டுமில்லாமல், 92 பந்துகளில் 123 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இவரது ஆல்-ரவுண்ட் திறன் நெதர்லாந்துக்கு மிக முக்கியமானது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேஜா நிடமனுரு சமீப காலமாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த மார்ச் மாதம் ஜிம்பாப்வேவுக்கு எதிராக இவர் சதம் அடித்தார். 2014-க்குப் பிறகு நெதர்லாந்துக்காக அடிக்கப்பட்ட முதல் சதம் இது. ஸ்காட் எட்வர்ட்ஸ், விக்ரம்ஜித் சிங் போன்ற பேட்டர்களும் ரன்கள் குவிக்கலாம்.
ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல பாஸ் டி லீட், பந்துவீச்சில் அசத்தி வருகிறார். 2023-ல் நெதர்லாந்துக்காக 22.13 சராசரியில் 15 விக்கெட்டுகள் என அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நீண்ட வருடங்களாக பல்வேறு லீக் கிரிக்கெட்டில் பார்த்து வரும் வாண்டர் மெர்வ் பந்தைச் சுழற்ற தயாராக உள்ளார்.
இவர்களுக்கான நாளாக அமைந்தால், கடந்தாண்டு டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியதைப்போல ஏதேனும் ஒரு பெரிய அணிக்குச் சிக்கலை உண்டாக்கலாம்.