நவம்பர் 2: மிட்செல் ஜான்சன் பிறந்தநாள்
1981
மிட்செல் ஜான்சன் பிறந்தநாள்!
இடக்கை வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் பிறந்தநாள் இன்று.
ஆஸ்திரேலிய ஜாம்பவான் டெனிஸ் லில்லி, ஜான்சனின் 17-வது வயதிலேயே அவரது திறமையைக் கண்டறிந்தார்.
அசுரத்தனமான வேகத்துக்குப் பெயர்போன ஜான்சன் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது ஆஸ்திரேலிய இடக்கை வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். 2005 முதல் 2015 வரை கிரிக்கெட் விளையாடியிருந்தாலும், இவரது கிரிக்கெட் உச்சம் 2013-ல் தான் வெளிப்பட்டது. இங்கிலாந்தில் நடைபெற்ற 2013 ஆஷஸில் சேர்க்கப்படாமல் 2013-14-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸில் சேர்க்கப்பட்டார்.
இந்த ஆஷஸில் ஆஸ்திரேலிய பந்துவீச்சைத் தோளில் சுமந்து பெரிய மீசையுடன் இங்கிலாந்து பேட்டர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் ஜான்சன். இவரது அசுரவேக ஷார்ட் பந்துகள், இங்கிலாந்து பேட்டர்களைக் கால் நடுங்கச் செய்தது என்றே சொல்லலாம். இந்தத் தொடரில் 13.97 சராசரியில் 37 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜான்சன், ஆஷஸை 5-0 என்ற கணக்கில் முழுமையாக வெல்ல முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார். இதே ஃபார்மை தென்னாப்பிரிக்காவுடனான தொடரிலும் தொடர்ந்தார். 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பேட்டிங்கிலும் அவ்வப்போது ஆறுதல் அளிக்கக்கூடிய திறன் கொண்ட ஜான்சன், டெஸ்டில் 1 சதம், 11 அரை சதங்கள் உள்பட 2,065 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாளில் 2 அரை சதங்கள் அடித்துள்ளார். 2015-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
டெஸ்டில் 73 ஆட்டங்களில் 313 விக்கெட்டுகளையும், ஒருநாள் ஆட்டத்தில் 153 ஆட்டங்களில் 239 விக்கெட்டுகளையும், டி20யில் 30 ஆட்டங்களில் 38 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
2013
ரோஹித் சர்மாவின் முதல் இரட்டைச் சதம்
2013-ல் ஆஸ்திரேலியாவுடனான 7 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற 7-வது ஒருநாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா 209 ரன்கள் விளாசினார்.
தொடக்க பேட்டர்களாக வழக்கம்போல ரோஹித் சர்மாவும், ஷிகர் தவனும் களமிறங்கினார்கள். தவன் அரை சதம் அடித்து 60 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பிறகு யாராலும் மறக்க முடியாத ரன் அவுட் நிகழ்ந்தது. கோலி, ரோஹித் இடையே குழப்பம் ஏற்பட்டு கோலி ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். ரோஹித் மீது கோபத்துடன் வெளியேறினார் கோலி.
இந்த விக்கெட்டுக்குப் பிறகு பொறுப்பை ஏற்றுக்கொண்ட ரோஹித் படிப்படியாக இன்னிங்ஸைக் கட்டமைத்தார். அரை சதத்தை 71 பந்துகளில் அடித்த இவர், முதல் சதத்தை 114 பந்துகளில் அடித்தார். இரட்டைச் சதத்தை 156 பந்துகளில் எட்டினார். அதாவது, 100 முதல் 200 வரையிலான ரன்களை எடுக்க வெறும் 42 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டார்.
இந்த இன்னிங்ஸில் இவர் 16 சிக்ஸர்கள் விளாசி, ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற ஷேன் வாட்சனின் (15) அப்போதைய சாதனையை முறியடித்தார். 209 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா இன்னிங்ஸின் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
சச்சின் டெண்டுல்கர், விரேந்தர் சேவாக் அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்தவர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார்.
ரோஹித் இரட்டைச் சதத்தால் இந்தியா 383 ரன்கள் குவிக்க, ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் ஃபாக்னர் சதமடித்து நெருக்கடிக்குள்ளாக்கினார். 116 ரன்களுக்குக் கடைசி விக்கெட்டாக இவர் ஆட்டமிழக்க இந்திய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரோஹித் சர்மா அடித்த மூன்று இரட்டைச் சதங்களில் இதுவே முதல் இரட்டைச் சதம்.